அனுமதி பெறாத குடிநீர் இணைப்புகளை துண்டிக்க நடவடிக்கை தேவை


அனுமதி பெறாத குடிநீர் இணைப்புகளை துண்டிக்க நடவடிக்கை தேவை
x
தினத்தந்தி 25 Dec 2016 4:15 AM IST (Updated: 24 Dec 2016 10:07 PM IST)
t-max-icont-min-icon

விருதுநகர், உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி பெறாத குடிநீர் இணைப்புகளை துண்டிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. குடிநீர் வினியோகம்

விருதுநகர்,

உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி பெறாத குடிநீர் இணைப்புகளை துண்டிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

குடிநீர் வினியோகம்

விருதுநகர் மாவட்டத்தில் 7 நகராட்சிகளும், 9 பேரூராட்சிகளும், 450 கிராம பஞ்சாயத்துகளும் உள்ளன. இந்த உள்ளாட்சி அமைப்புகள் அனைத்துமே தங்கள் பகுதியில் உள்ள மக்களின் குடிநீர் தேவைக்கு பெரும்பாலும் நிலத்தடி நீர் ஆதாரத்தையே நம்பி உள்ளன. நகராட்சி பகுதிகளிலும் ஒரு சில பேரூராட்சி பகுதிகளிலும் மட்டுமே தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் 20 முதல் 25 சதவீதம் வரை குடிநீர் கிடைக்கும் நிலை உள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளில் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்க டெபாசிட் தொகையும், பயன்பாட்டு கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குடிநீர் வடிகால் வாரியத்தினர் கிராமப்பகுதிகளில் ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் கொடுக்க வேண்டிய குடிநீர் குழாய் இணைப்புகளை நிர்ணயம் செய்து கொடுத்து விடுகின்றனர்.

முறைகேடு

ஆனால் பல நகராட்சி மற்றும் பேரூராட்சி, கிராம பஞ்சாயத்துகளில் அந்த உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி பெறாமல் முறைகேடாக பலர் குடிநீர் குழாய் இணைப்புகளை பெற்றுள்ளனர். உள்ளாட்சி அமைப்புகளும் இது பற்றி முறையான ஆய்வு ஏதும் நடத்தாததால் அனுமதி பெறாமல் எத்தனை குடிநீர் குழாய் இணைப்புகள் பெறப்பட்டுள்ளது என்பது தெரியாத நிலையே இருந்து வருகிறது. ஒரு சில உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீர் பிரச்சினை ஏற்படும் நேரத்தில் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் ஆய்வு நடத்தியதில் அனுமதி இல்லாமல் குடிநீர் குழாய் இணைப்பு பெறப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

சேத்தூர் பேரூராட்சி

ராஜபாளையம் அருகில் உள்ள சேத்தூர் பேரூராட்சியில் அனுமதிக்கப்பட்ட குடிநீர் குழாய் இணைப்புகளுக்கு குடிநீர் வினியோகம் செய்ய தினசரி 12 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும் நிலையில் தினசரி 4 லட்சம் லிட்டர் தண்ணீரே கிடைப்பதால் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பேரூராட்சியின் உதவி இயக்குனர் ஒரு சிறப்புக்குழு அமைத்து முறைகேடாக பெறப்பட்ட குடிநீர் குழாய்களை கண்டறிய உத்தரவிட்டார். அந்த குழுவினர், 200 குடிநீர் குழாய்கள் அனுமதி இல்லாமல் இருப்பதை கண்டுபிடித்தனர். இந்த குடிநீர் குழாய் இணைப்புகளை துண்டிப்பதற்கு உத்தரவிட்டுள்ள போதிலும் இன்னும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாத நிலையே உள்ளது.

இதே போன்று அருப்புக்கோட்டை யூனியனில் உள்ள செட்டிக்குறிச்சி பஞ்சாயத்தில் அனுமதி இல்லாமல் குடிநீர் குழாய் இணைப்புகள் இருப்பதாக புகார் எழுந்ததின் அடிப்படையில் அந்த இணைப்புகளை துண்டிக்க பஞ்சாயத்து யூனியன் அதிகாரிகள் உத்தரவிட்ட பின்னரும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எடுக்காத நிலை...

விருதுநகர் நகராட்சியில் சில வருடங்களுக்கு முன்னர் ஆய்வு நடத்தியதில் அனுமதி இல்லாமல் குடிநீர் குழாய் இணைப்புகள் இருப்பது தெரியவந்தது. அதனை முறைப்படுத்த அப்போது நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் அதன் பின்னர் எந்த ஆய்வும் நடத்தப்படவில்லை. தற்போது 5,000-க்கும் மேற்பட்ட பாதாள சாக்கடை இணைப்புகள் அனுமதி இல்லாமல் இருப்பதை கண்டறிந்து அதனை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் குடிநீர் குழாய் இணைப்புகள் அனுமதியுடன் பெறப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு நடத்த எந்தவித நடவடிக்கையும் நகராட்சி பகுதிகளில் எடுக்காத நிலையே உள்ளது.

தேவை

இந்தநிலையில் மாவட்டம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி பெறாமல் முறைகேடாக குடிநீர் குழாய் இணைப்புகள் இருக்க வாய்ப்பு உள்ளது. இதனால் குடிநீர் பிரச்சினை கடுமையாகும் நிலை ஏற்படுவதுடன் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

எனவே உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் ஆய்வு மேற்கொள்ள சிறப்பு குழுக்கள் அமைத்து அனுமதி இல்லாமல் உள்ள குடிநீர் குழாய் இணைப்புகளை கண்டறிய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும்.

கோரிக்கை

தற்போது உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில் தனி அதிகாரிகளை அழைத்து கூட்டம் நடத்தி இப்பிரச்சினை குறித்து ஆய்வு செய்து உடனடியாக அறிக்கை தாக்கல் செய்யவும், அதனை தொடர்ந்து நகராட்சி நிர்வாக ஆணையம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை உயர் அதிகாரிகள் மூலம் மாவட்டம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் அனுமதி பெறாமல் உள்ள குடிநீர் குழாய் இணைப்புகளை துண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story