பக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் ராதாபுரம் பகுதி மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இன்பதுரை எம்.எல்.ஏ., கலெக்டரிடம் கோரிக்கை மனு
பக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் ராதாபுரம் பகுதி மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் கருணாகரனிடம், ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ. ஐ.எஸ்.இன்பதுரை கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கொடுத்துள்ள மனுவில், "நெல்லை மாவட்டம் ராதாபுர
நெல்லை,
பக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் ராதாபுரம் பகுதி மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் கருணாகரனிடம், ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ. ஐ.எஸ்.இன்பதுரை கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கொடுத்துள்ள மனுவில், "நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட கூட்டப்புளி கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் கென்னடி, சலேட்ராஜா, வின்சென்ட், சாகர், கிளவுடின், இடிந்தகரை கிராமத்தை சேர்ந்த பிரசாந்த், அந்தோணி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 7 பேர், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் உள்பட மொத்தம் 15 பேர் பக்ரைன் நாட்டில் மீன்பிடி தொழில் செய்ய சென்றுள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் 20–ந் தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ஈரான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, அங்குள்ள கீஸ் என்ற தீவில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
எம்.எல்.ஏ.வுடன், ராதாபுரம் ஒன்றிய செயலாளர் அந்தோணி அமலராஜா, ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் முருகேசன், மாவட்ட மீனவர் அணி செயலாளர் அகிலன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் செல்வின், திசையன்விளை ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெயக்குமார் மற்றும் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களின் உறவினர்களும் சென்றனர்.