நெல்லை பேட்டையில் மின்ஒயரில் உரசியதால் பஸ் சிறைபிடிப்பு


நெல்லை பேட்டையில் மின்ஒயரில் உரசியதால் பஸ் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 25 Dec 2016 2:15 AM IST (Updated: 25 Dec 2016 12:53 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை பேட்டையில் மின் ஒயரில் உரசியதால் பஸ் சிறைபிடிக்கப்பட்டது. போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

பேட்டை,

நெல்லை பேட்டையில் மின் ஒயரில் உரசியதால் பஸ் சிறைபிடிக்கப்பட்டது. போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

மின்ஒயர் சேதம்

நெல்லை பேட்டையை அடுத்த கருங்காட்டில் இருந்து பாளையங்கோட்டை ஐகிரவுண்டுக்கு செல்வதற்காக ஒரு தனியார் பஸ் நேற்று காலை புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சை அம்பையைச் சேர்ந்த சாமுவேல் (வயது 25) ஓட்டி வந்தார்.

பேட்டை கிறிஸ்தவ ஆலயம் அருகே வந்தபோது, டிரைவர் சாமுவேல் செல்போனில் பேசிக்கொண்டு பஸ்சை ஓட்டியதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் எதிரே வந்த மோட்டார் சைக்கிளுக்கு வழிவிடுவதற்காக பஸ்சை திடீரென திருப்பிய போது, அந்த பகுதியில் கிறிஸ்துமஸ் விழாவுக்காக கட்டப்பட்டு இருந்த மின்ஒயர் மீது பஸ் உரசியதில், மின்ஒயர் அறுந்து சாலையில் விழுந்ததாகவும் தெரியவருகிறது.

பஸ் சிறைபிடிப்பு

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் திரண்டு வந்து அந்த பஸ்சை சிறைபிடித்தனர். டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பேட்டை போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றுவிட்டனர்.

சுமார் அரை மணிநேரம் சிறைபிடிக்கப்பட்டு இருந்த அந்த பஸ் விடுவிக்கப்பட்டது. அதன்பின்பு பயணிகளுடன் அந்த பஸ் புறப்பட்டு சென்றது.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

Next Story