ஊட்டி அருகே இறந்த முன்னோர்களுக்கு பாரம்பரிய நடனமாடி அஞ்சலி செலுத்திய கோத்தர் இன மக்கள்


ஊட்டி அருகே இறந்த முன்னோர்களுக்கு பாரம்பரிய நடனமாடி அஞ்சலி செலுத்திய கோத்தர் இன மக்கள்
x
தினத்தந்தி 25 Dec 2016 4:00 AM IST (Updated: 25 Dec 2016 1:21 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி அருகே கோக்கால் கிராமத்தில் இறந்த முன்னோர்களுக்கு தங்களது பாரம்பரிய முறைப்படி கோத்தர் இன மக்கள் நடனமாடி அஞ்சலி செலுத்தினார்கள். கோத்தர் இன மக்கள் நீலகிரி மாவட்டத்தில் கோத்தர்கள், தோடர்கள், காட்டு நாயக்கர்கள், குறும்பர்கள், பனியர்கள், இருளர்கள் உள

ஊட்டி,

ஊட்டி அருகே கோக்கால் கிராமத்தில் இறந்த முன்னோர்களுக்கு தங்களது பாரம்பரிய முறைப்படி கோத்தர் இன மக்கள் நடனமாடி அஞ்சலி செலுத்தினார்கள்.

கோத்தர் இன மக்கள்

நீலகிரி மாவட்டத்தில் கோத்தர்கள், தோடர்கள், காட்டு நாயக்கர்கள், குறும்பர்கள், பனியர்கள், இருளர்கள் உள்ளிட்ட ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனர். இதில் கோத்தர் இன ஆதிவாசி மக்கள் கூடலூர், ஊட்டி, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் வாழ்கின்றனர். இவர்கள் அய்யனோர், அம்மனோரை குல தெய்வமாக வணங்கி வருகின்றனர். இவர்கள் பல தலைமுறைகளாக தங்களது பாரம்பரியத்தை கடைபிடித்து வருகின்றனர்.

ஊட்டி அருகே உள்ள கோக்கால் கிராமத்தில் கோத்தர் இன மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் இறந்த தங்களது முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடையும் வகையில் பாரம்பரிய நடனமாடி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தி வருகிறார்கள். இதன்படி நேற்று கோக்கால் கிராமத்தில் முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் கோத்தர் இன ஆதிவாசி மக்கள் கலந்து கொண்டு தங்களது முன்னோர்களுக்கு பாரம்பரிய முறைப்படி நடனமாடி அஞ்சலி செலுத்தினர்.

இசைக்கருவிகள்

இதுகுறித்து கோக்கால் கிராமத்தை சேர்ந்த பூசாரி சந்திர பெள்ளன் கூறியதாவது:–

நீலகிரி மாவட்டத்தில் திருச்சிக்கடி, கீழ்கோத்தகிரி, கோத்தகிரி, கொல்லிமலை, கூடலூர் கோக்கால், ஊட்டி அருகே உள்ள கோக்கால் உள்ளிட்ட கிராமங்களில் கோத்தர் இன மக்கள் வசித்து வருகின்றோம். நாங்கள் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையும் வகையில் சிறப்பு வழிபாடு மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை நடத்துகிறோம். இதனை எங்களது மொழியில் ‘வரசாவு‘ என்று அழைக்கிறோம்.

இதன்படி இந்த ஆண்டு கடந்த 22–ந்தேதி இதற்கான நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டன. இன்று (நேற்று) இறந்தவர்களின் சாம்பல் சேகரிக்கப்பட்டு, அதற்கு சிறப்பு வழிபாடு நடத்தினோம். இதனை தொடர்ந்து பாரம்பரிய உடை அணிந்து, எங்களது பாரம்பரிய இசைக்கருவிகள் இசைத்தோம். இதில் முதலில் ஆண்களும், பின்னர் பெண்களும் பாரம்பரிய நடனம் ஆடி அஞ்சலி செலுத்தினோம். இந்த நடனம் இரவு வரை தொடர்ந்து நடைபெற்றது.

கில்லி விளையாட்டு

இன்னும் சில நாட்கள் கழித்து புனித மண் சுமக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் கோத்தர் இன பெண்கள் பாரம்பரிய உடை அணிந்து நாங்கள் புனிதமாக கருதும் இடத்தில் இருந்து மண் சுமந்து வருவார்கள். பின்னர் இந்த புனித மண்ணை கொண்டு மண் பானைகள் செய்வார்கள்.

புதிய மண்பானையில் தானியங்களை சமைத்து குலதெய்வம் முன்பு படையல் வைப்பார்கள். இதைத்தொடர்ந்து புதிய தானிய உணவை அனைவரும் சாப்பிடுவோம். இந்த பண்டிகையின் இறுதியாக கில்லி விளையாடுவோம். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இந்த கில்லி விளையாடப்படும். பின்னர் இதற்கு பயன்படுத்தப்படும் குச்சிகள் குல தெய்வ கோவிலில் வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story