54½ லட்சம் புதிய ரூபாய் நோட்டுகளுடன் சிக்கிய நைஜீரியாவை சேர்ந்தவருடன் திருப்பூர் பனியன் வியாபாரிக்கு தொடர்பா? வருமானவரித் துறையினர் தீவிர விசாரணை


54½ லட்சம் புதிய ரூபாய் நோட்டுகளுடன் சிக்கிய நைஜீரியாவை சேர்ந்தவருடன் திருப்பூர் பனியன் வியாபாரிக்கு தொடர்பா? வருமானவரித் துறையினர் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 25 Dec 2016 3:45 AM IST (Updated: 25 Dec 2016 1:29 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் 54½ லட்சம் புதிய ரூபாய் நோட்டுகளுடன் சிக்கிய நைஜீரியாவை சேர்ந்தவருடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து திருப்பூர் பனியன் வியாபாரியிடம் வருமானவரித் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் டெல்லியில் இருந்து

கோவை,

கோவையில் 54½ லட்சம் புதிய ரூபாய் நோட்டுகளுடன் சிக்கிய நைஜீரியாவை சேர்ந்தவருடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து திருப்பூர் பனியன் வியாபாரியிடம் வருமானவரித் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

டெல்லியில் இருந்து நேற்று முன்தினம் காலை கோவை வந்த விமானத்தில் 54½ லட்சம் புதிய ரூபாய் நோட்டுகளுடன் நைஜீரியா நாட்டை சேர்ந்த டொசுகு சிஜியோக் (வயது 37) என்பவரை வருமான வரித்துறை அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர். அவரிடம் இருந்து புதிய 2 ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகள் மட்டும் ரூ.54½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதுபோன்று 100 ரூபாய் நோட்டுகள் ரூ.40 ஆயிரமும், செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 1,000 ரூபாய் நோட்டுகள் ரூ.1 லட்சத்து 74 ஆயிரமும், 500 ரூபாய் நோட்டுகள் ரூ.1 லட்சத்து 55 ஆயிரமும், 100 டாலரும் இருந்தது. அந்த ரூபாய் நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

பனியன் வியாபாரிக்கு தொடர்பா?

அவரிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, திருப்பூரில் பனியன் வியாபாரம் செய்து வருவதாக கூறினார். அவருடைய விசாவை அதிகாரிகள் சோதனை செய்தபோது அது, கடந்த 2015–ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் முடிவடைந்து விட்டது தெரியவந்தது. அத்துடன் அந்த நபர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால், அவர் மீது சந்தேகம் வலுத்தது.

எனவே அவரிடம் வருமான வரித்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் திருப்பூரில் கடந்த 3 ஆண்டுகளாக பனியன் வாங்கி விற்பனை செய்து வருவதும், திருப்பூரை சேர்ந்த பனியன் வியாபாரியுடன் கடந்த 1½ ஆண்டுகளாக வியாபாரம் செய்ததும் தெரியவந்தது. எனவே ரூபாய் நோட்டுகள் விவகாரத்தில் அந்த வியாபாரிக்கு தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து திருப்பூர் பனியன் வியாபாரியிடம் வருமானவரித் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து விசாரணை நடத்தி வரும் அதிகாரிகள் கூறியதாவது:–

தீவிர விசாரணை

நைஜீரியாவை சேர்ந்த டொசுகு சிஜியோக்கிடம் விசாரணை நடத்தியதில் திருப்பூரை சேர்ந்த பனியன் வியாபாரி ஒருவரின் பெயரை மட்டும் கூறினார். எனவே இந்த விவகாரத்தில் அந்த வியாபாரிக்கு என்ன தொடர்பு? அவருக்கு மட்டும் தான் தொடர்பு உள்ளதா? வேறு வியாபாரிகள் யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து அந்த வியாபாரியிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம்.

கட்டுக்கட்டாக புதிய ரூபாய் நோட்டுகள் டொசுகு சிஜியோக்கு எப்படி கிடைத்தது? அவரின் விசா காலம் முடிந்தது, அந்த பனியன் வியாபாரிக்கு தெரியுமா? என்றும் விசாரணை நடத்தி வருகிறோம். அவரிடம் இன்னும் விசாரணை முடியவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story