கோவை மாவட்டத்தில் வங்கிகளில் பணத்தட்டுப்பாட்டால் தபால் சேவைகள் கடும் பாதிப்பு பிரதமருக்கு ‘பேக்ஸ்’ அனுப்பினர்


கோவை மாவட்டத்தில் வங்கிகளில் பணத்தட்டுப்பாட்டால் தபால் சேவைகள் கடும் பாதிப்பு பிரதமருக்கு ‘பேக்ஸ்’ அனுப்பினர்
x
தினத்தந்தி 25 Dec 2016 4:00 AM IST (Updated: 25 Dec 2016 1:29 AM IST)
t-max-icont-min-icon

வங்கிகளில் ஏற்பட்டுள்ள பண தட்டுப்பாட்டால் மணியார்டர் உள்ளிட்ட தபால்துறையின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. பண தட்டுப்பாடு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதில் இருந்து கோவையில் கடும் பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக

கோவை,

வங்கிகளில் ஏற்பட்டுள்ள பண தட்டுப்பாட்டால் மணியார்டர் உள்ளிட்ட தபால்துறையின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

பண தட்டுப்பாடு

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதில் இருந்து கோவையில் கடும் பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக தொழில் நிறுவனங்கள் மூலப்பொருட்களை வாங்க முடியாததால் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டு உள்ளது. சில இடங்களில் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை உள்ளது.

மோட்டார் பம்ப், கிரைண்டர் உற்பத்தி, உதிரிபாக தயாரிப்பு மற்றும் ஜவுளி, நகை தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 1½ மாதங்களாக கோவையில் உள்ள பெரும்பாலான ஏ.டி.எம். மையங்கள் மூடியே கிடக்கின்றன. நகரில் ஒரு சில ஏ.டி.எம். மையங்களில் மட்டும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மட்டும் நிரப்புகின்றனர். பொதுமக்கள் பணம் இருக்கும் ஏ.டி.எம். மையங்களில் குவிவதால், சில மணிநேரங்களிலேயே பணம் தீர்ந்து போய்விடுகிறது.

வங்கிகளிலும் பணத்தட்டுப்பாடு இருப்பதால் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த அளவே பணம் வினியோகிக்கப்படுகிறது. பெரும்பாலான வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்து இருப்பவர்களுக்கு ரூ.4 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையும், நடப்பு கணக்கு வைத்து இருக்கும் வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.24 ஆயிரம் வரையும் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கணக்கில் இருக்கும் பணத்தை தேவையான அளவுக்கு எடுக்க முடியாமல் பொதுமக்களும், வியாபாரிகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தபால் நிலைய சேவைகள்

பணத்தட்டுப்பாடு காரணமாக தபால்நிலைய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தபால்துறை அதிகாரிகள் கூறியதாவது:–

கோவையில் உள்ள தலைமை தபால் நிலையத்துக்கு பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து ரூ.60 லட்சம் எடுத்து தான் பணப்பரிமாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 1 மாதத்துக்கு மேலாக ஸ்டேட் வங்கி தலைமை தபால் நிலையத்துக்கு பணம் வழங்குவதை மிகவும் குறைத்து விட்டனர். இதனால் தபால் சேமிப்பு வாடிக்கையாளர்கள் அவரது கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் மணியார்டர் போன்ற பண பரிவர்த்தனை சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மாத கடைசி நாட்களில் பென்சன் மற்றும் சம்பள பட்டுவாடாவுக்காக வங்கியில் இருந்து ரூ.2 கோடி பணம் எடுக்கப்படும். ஆனால் இந்த மாதம் பணம் கிடைக்காத நிலை உள்ளது. தபால் நிலையங்களில் தினமும் டெபாசிட் ஆகும் தொகையை வைத்துதான் நிலைமையை ஓரளவு சமாளித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமருக்கு ‘பேக்ஸ்’

இந்த நிலையில் கோவை கோட்ட தபால் ஊழியர்கள் சங்க 3–ம் பிரிவு தலைவர் வேலுசாமி, செயலாளர் எபனேசர் காந்தி, நிதி செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் கையெழுத்திட்டு பிரதமருக்கு ‘பேக்ஸ்’ அனுப்பியுள்ளனர். அதில், தபால்நிலைய சேவைகளுக்கு தேவையான பணத்தை வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.


Next Story