இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை: புதுவையில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை ஏராளமானோர் கலந்து கொண்டனர்
இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி புதுவையில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பைபிள் ஏசு கிறிஸ்து 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு டிசம்பர் 25–ந்தேதி பெத்லகேம் என்னும் ஊரிலுள்ள ஒரு மாட்டுத்தொழுவில் பிற
புதுச்சேரி,
இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி புதுவையில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.பைபிள்
ஏசு கிறிஸ்து 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு டிசம்பர் 25–ந்தேதி பெத்லகேம் என்னும் ஊரிலுள்ள ஒரு மாட்டுத்தொழுவில் பிறந்தார் என்று அவர்களது புனித நூலான ‘‘பைபிளில்’’ கூறப்பட்டுள்ளது. இந்த நாளை ‘கிறிஸ்துமஸ் பண்டிகை’ என்று உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறார்கள். கிறிஸ்தவர்கள் வீடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் சிலநாட்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது. வீட்டு வாசல்களில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட நட்சத்திரங்களை தொங்கவிட்டிருக்கிறார்கள். வீடுகளுக்குள் கிறிஸ்துமஸ் மரம் வைத்து அதை அலங்கரித்து அதில் குழந்தைகளுக்காக சிறு, சிறு பரிசுபொருட்களை தொங்கவிட்டு உள்ளனர்.
விசேஷ பிரார்த்தனைகள்
இந்த நாளில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தேவாலயங்களில் விசேஷ பிரார்த்தனைகள் நள்ளிரவு முதல் அதிகாலை 4 மணி, 7 மணி, 8.30 மணி, மாலையில் என்று ஒவ்வொரு கோவிலிலும் பலமுறைகள் பிரார்த்தனைகள் நடத்தப்படுகின்றன.
தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா
புதுச்சேரியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நேற்று நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. புதுச்சேரி ரெயில் நிலையம் அருகே உள்ள தூய இருதய ஆண்டவர் பசிலிக்காவில் பங்குத்தந்தை மரியஜோசப் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. முன்னதாக 10.30 மணிக்கு கிறிஸ்து பிறப்பு பாடலுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து திருப்பலி மற்றும் கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு திருப்பலி நடந்தது.
அப்போது இயேசு கிறிஸ்து பிறப்பதை குறிக்கும் வகையில் குழந்தை இயேசுவின் சொரூபம், கோவில் வாளகத்தில் அமைக்கப்பட்டிருந்த விசேஷ குடிலில் வைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட அனைவரும் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
ஜென்மராக்கினி மாதா தேவலாயம்புதுவை மிஷன் வீதியில் உள்ள ஜென்மராக்கினி மாதா தேவலாயத்தில் புதுச்சேரி–கடலூர் உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் கிறிஸ்து பிறப்பு விழா திருப்பலி நடந்தது. இரவு 11.50 மணிக்கு இயேசு பிறப்பை குறிக்கும் வகையில் குழந்தை இயேசுவின் சொரூபம், ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த விசேஷ குடிலில் வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனையும் நடந்தது.
புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தூயயோவான் தேவாலயம், தட்டாஞ்சாவடியில் உள்ள பாத்திமா தேவாலயம், வில்லியனூர் மாதா கோவில், அரியாங்குப்பம் மாதா திருத்தலம், ஆட்டுப்பட்டி அந்தோணியார் ஆலயம், முத்தியால்பேட்டை புனித அந்தோணியார் ஆலயம் உள்பட புதுவையில் உள்ள அனைத்து தேவாலயங்களில் நேற்று நள்ளிரவு சிறப்பு திருப்பலியும், பிரார்த்தனைகளும் நடந்தன.
முதல்–அமைச்சர் பங்கேற்புபுதுவை நெல்லித்தோப்பில் உள்ள புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் முதல்–அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு ஆலய வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த குடிலில் உள்ள இயேசுவின் சொரூபத்தை வணங்கினார். அதைத்தொடர்ந்து அவர், அங்கிருந்த அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
புதுவை ரெயின்போ நகரில் உள்ள புனித ஜான்மரி வியான்னி ஆலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் சபாநாயகர் வைத்திலிங்கம் கலந்துகொண்டார். அவர், கிறிஸ்தவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து, இனிப்புகள் வழங்கினார்.