காரிமங்கலம் அருகே இரும்பு வியாபாரியிடம் கத்தியை காட்டி ரூ.35 லட்சத்தை பறித்த 3 பேர் கைது தலைமறைவான 4 பேருக்கு வலைவீச்சு
காரிமங்கலம் அருகே இரும்பு வியாபாரியிடம் கத்தியை காட்டி ரூ.35 லட்சத்தை பறித்து சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். 3 பேர் சிக்கினர் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் ரூபாய் நோட்டுகளை மாற்றும் ஒரு கும்பல்
காரிமங்கலம்,
காரிமங்கலம் அருகே இரும்பு வியாபாரியிடம் கத்தியை காட்டி ரூ.35 லட்சத்தை பறித்து சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
3 பேர் சிக்கினர்தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் ரூபாய் நோட்டுகளை மாற்றும் ஒரு கும்பல் வீட்டில் பதுங்கி இருப்பதாக தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவருடைய உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மற்றும் காரிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார், சப்–இன்ஸ்பெக்டர் இளவரசன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் கள்ளிபுரம் பகுதிக்கு சென்று ரகசியமாக கண்காணித்தனர்.
அப்போது வீட்டில் 3 பேர் பதுங்கி இருந்த பென்னாகரம் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த பிரபு (வயது 32), பென்னாகரம் கள்ளிபுரத்தை சேர்ந்த மதி(32), செல்வகுமார்(33) ஆகிய 3 பேரையும் மடக்கி பிடித்தனர். மேலும் வீட்டில் இருந்த ரூ.22 லட்சத்து 800 மற்றும் 3 வீச்சரிவாள் ஆகியவற்றை தனிப்படை போலீசார் கைப்பற்றினர். சிக்கிய 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்திய போது பழைய ரூபாய் நோட்டுகளை பெற்று கொண்டு புதிய நோட்டுகளை கமிஷனுக்கு மாற்ற பதுக்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் சிக்கிய 3 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
அப்போது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. அதன் விவரம் வருமாறு:–
இரும்பு வியாபாரிகரூர் காமராஜர் சாலையில் வசித்து வருபவர் சங்கர் (வயது 40). இரும்பு வியாபாரி. இவரிடம் கரூர் சி.ஏ.கே. ரோடு பகுதியை சேர்ந்த முருகேசன் மற்றும் திருச்சி உறையூரை சேர்ந்த பெரியசாமி ஆகிய 2 பேரும் புதிய ரூபாய் நோட்டுகளுக்கு 20 சதவீதம் கூடுதல் கமிஷன் கொடுத்து பழைய 500, 1,000 ரூபாய்களை மாற்றி கொள்ளும் நபர் தன்னிடம் இருக்கிறார் என்று கூறியுள்ளார். இதை நம்பிய சங்கர் அந்த நபர் குறித்து முருகேசன், பெரியசாமியிடம் கேட்டுள்ளார்.
இதையடுத்து முருகேசன், ஈரோட்டை சேர்ந்த மகேஸ்குமார் என்பவரை சங்கருக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவரை சங்கருக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். சங்கர் 35 லட்சம் ரூபாயை மாற்ற முயன்றார். அதற்காக மகேஷ்குமார் மற்றும் பென்னாகரத்தை சேர்ந்த நாகராஜ் ஆகியோரை போனில் தொடர்பு கொண்டு எங்கு வரவேண்டும் என சங்கர் கேட்டுள்ளார்.
ரூ.35 லட்சம்அவர்கள் கூறியபடி சங்கர் புதிய நோட்டுகள் ரூ.35 லட்சத்துடன் ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி என கூறிய இடமெல்லாம் அழைந்து திரிந்துள்ளார். முடிவில் கடந்த 19–ந்தேதி காரிமங்கலம் மொரப்பூர் ரோட்டில் நிற்குமாறு சங்கரிடம் அவர்கள் கூறியுள்ளனர். அதன்படி பணத்துடன் காத்திருந்த சங்கரிடம் பென்னாகரத்தை சேர்ந்த நாகராஜ் உள்பட 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர்.
அவர்கள் வைத்திருந்த பையில் இருந்த பழைய 500 ரூபாய் நோட்டுகளை காண்பித்து சங்கர் வைத்திருந்த பையை திறந்து காண்பிக்க கூறியுள்ளனர். சங்கர் தனது பையை திறந்து அதில் இருந்த புதிய 500, 2,000 ரூபாய் நோட்டுகளை காண்பித்துள்ளார்.
3 பேர் கைதுஅப்போது கத்தியை காட்டி மிரட்டி விட்டு சங்கர் கையிலிருந்த பணப்பையை பறித்து கொண்டு நாகராஜ் உள்ளிட்ட 2 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடி விட்டனர். போலீசாரிடம் சிக்கிய பிரபு உள்ளிட்ட 3 பேரும், ஏரிகொல்லனூரை சேர்ந்த நாகராஜ், குன்னத்தூரை சேர்ந்த ராஜா, கொட்டாவூரை சேர்ந்த சாமிதுரை மற்றும் இவர்களின் நண்பர் ஒருவர் ஆகிய 7 பேரும் சேர்ந்து கரூரை சேர்ந்த இரும்பு வியாபாரியிடம் ரூ.35 லட்சத்தை பறித்து சென்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக மொத்தம் 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் போலீசாரிடம் சிக்கிய பிரபு உள்ளிட்ட 3 பேரும் கைது செய்யப்பட்டனர். மேலும் தலைமறைவாக உள்ள 4 பேரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.