அருப்புக்கோட்டையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தகவல்


அருப்புக்கோட்டையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தகவல்
x
தினத்தந்தி 26 Dec 2016 4:30 AM IST (Updated: 25 Dec 2016 10:32 PM IST)
t-max-icont-min-icon

அருப்புக்கோட்டை, அருப்புக்கோட்டை நகரில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கூறினார். குடிநீர் பிரச்சினை அருப்புக்கோட்டை நகரா

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை நகரில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கூறினார்.

குடிநீர் பிரச்சினை

அருப்புக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் உள்ள மக்களுக்கு முறையாக குடிநீர் வழங்குவது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) முத்து, குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர் வெங்கடாசலம், உதவி பொறியாளர் செல்வக்குமார், முன்னாள் நகர் மன்ற தலைவர் சிவப்பிரகாசம், முன்னாள் யூனியன் தலைவர் சுப்பாராஜ் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சாத்தூர் ராமச்சந்திரன் பேசுகையில் கூறியதாவது;-

திட்டம்

அருப்புக்கோட்டை நகர் பகுதி மக்களுக்கு தினந்தோறும் 60 லட்சம் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. கடந்த காலங்களில் வைகையில் இருந்து 30 லட்சம் லிட்டர் குடிநீரும், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 40 லட்சம் லிட்டர் குடிநீரும் கிடைக்கப்பெற்று அதனை நகர் மக்களுக்கு வாரம் ஒரு முறை வினியோகம் செய்து வரப்பட்டது. நாளடைவில் வைகை அணை நீர் வறண்டதால் அங்கிருந்து கிடைக்கபெற்ற குடிநீர் முற்றிலும் நிறுத்தப்பட்டது. வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் தாமிரபரணியிலிருந்து 35 லட்சம் லிட்டர் குடிநீர் மட்டுமே கிடைக்கிறது.

நகராட்சி நிர்வாகமும் இதனை சமாளிக்க மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் நகர் பகுதியினை 17 பகுதிகளாக பிரித்து, 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்து வருகிறது. தற்போது தாமிரபரணியிலிருந்து வரும் குடிநீரும் தொடர்ந்து வராமல் விட்டு விட்டு வருவதால் மக்களுக்கு வினியோகம் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. வரும் காலங்களில் இது போன்று நிகழா வண்ணம் இருக்க 40 லட்சம் லிட்டர் வழங்கிட ஏற்பாடு நடக்கிறது.

வடகிழக்கு பருவ மழை பொய்த்த நிலையில் தாமிர பரணி குடிநீர் ஆதாரம் குறைந்து வருகிறது. குடிநீர் ஆதாரத்தை பெருக்க மணிமுத்தாறு, பாபநாசம் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் பனீந்தர்ரெட்டியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். வரும் காலங்களில் குடிநீர் பிரச்சினை வராமல் தடுக்கும் வண்ணம் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகளிடம் அதற்கான முன்னேற்பாடுகளை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பார்வையிட்டார்

பின்னர் அவர் நகர் காவல் நிலையம் பின்புறம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியையும் பகிர்மான குழாய்கள் பதிக்கும் பாதைகளையும் பார்வையிட்டார்.

Next Story