வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு


வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
x
தினத்தந்தி 26 Dec 2016 4:30 AM IST (Updated: 25 Dec 2016 11:29 PM IST)
t-max-icont-min-icon

வேளாங்கண்ணி, வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். கிறிஸ்துமஸ் பண்டிகை நாகை மாவட்டம் வேளா

வேளாங்கண்ணி,

வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகை

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. கீழை நாடுகளின் “லூர்து நகர்” என்று அழைக்கப்படும் வேளாங் கண்ணி பேராலயத்திற்கு நாள்தோறும் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் திரளாக வந்து மாதாவை வழிபட்டு செல்கின்றனர். கிறிஸ்தவ ஆலயங்களில் “பசிலிக்கா” என்ற சிறப்பு அந்தஸ்து பெற்ற ஆலயமாகவும் வேளாங் கண்ணி பேராலயம் சிறப்பிக்கப்படுகிறது. பேராலயம் வங்க கடற்கரையில் அமைந்துள்ளதால் பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த ஆலயத்தில் ஏசு பிறந்த நாளான கிறிஸ்துமஸ் பண்டிகை நாளில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும். இதையொட்டி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாள் நள்ளிரவில் ஏசு பிறப்பு நிகழ்ச்சி நடைபெறும். அப்போது சிறப்பு பிரார்த்தனை கூட்டம் மற்றும் ஜெப வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவில் ஏசு பிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஏசு பிறப்பு நிகழ்ச்சி

இரவு 11.30 மணியளவில் புனித ஆரோக்கியமாதா விண்மீன் ஆலயத்தில் பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில், பங்குதந்தை சூசைமாணிக்கம், பொருளாளர் யாகப்பா ராஜரத்தினம், உதவி பங்கு தந்தைகள் ஜோதிநல்லப்பன், ஆரோக்கிய சுந்தரம், அரோன் மற்றும் குருக்கள், கன்னியாஸ்திரிகள் ஊர்வலமாக வந்தனர். பின்னர் இரவு 11.45 மணிஅளவில் ஏசு பிறப்பு நிகழ்ச்சி சிறப்பு திருப்பலியுடன் தொடங்கியது. இதில் கிருபா ஆசிர்வாதம், மறைஉரை, தமிழ், ஆங்கிலம், ஆகிய மொழிகளில் ஜெபம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் பாவமன்னிப்புக்கான பிரார்த்தனை நடைபெற்றது.

அதைதொடர்ந்து சூசையப்பர் மற்றும் மரியாளாக வேடம் அணிந்தவர்கள் குழந்தை ஏசுவின் சொரூபத்தை பவனியாக கொண்டு வந்து பேராலய அதிபர் பிரபாகரிடம் கொடுத்தனர். பின்னர் சொரூபத்தை எடுத்து சென்று அருகில் அமைக்கப்பட்டிருந்த குடிலில் வைத்து குழந்தை ஏசு நாதர் பிறந்து விட்டதாக அறிவித்தார். அப்போது வாணவேடிக்கை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

கூட்டு திருப்பலி

அதைதொடர்ந்து நள்ளிரவு 1.30 மணி வரை திருப்பலி நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் வந்திருந்த திரளான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். இதையடுத்து நேற்று அதிகாலைமுதல் பேராலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திருப்பலியும், காலை 8 மணிக்கு கூட்டுதிருப்பலியும் தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் திருப்பலி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அங்கு பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

Next Story