பிதிர்காடு பகுதியில் வனவிலங்குகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உண்ணிச்செடிகளை அகற்றும் பணி மும்முரம்
பிதிர்காடு வனப்பகுதியில் வனவிலங்குகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ள உண்ணிச்செடிகளை அகற்றும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. வனவிலங்குகள் பந்தலூர் அருகே உள்ள பிதிர்காடு வனத்துறை எல்லைக்குட்பட்ட பிதிர்காடு, பாட்டவயல், மாங்கோடு, கக்குண்டி, அய்ய
பந்தலூர்,
பிதிர்காடு வனப்பகுதியில் வனவிலங்குகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ள உண்ணிச்செடிகளை அகற்றும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
வனவிலங்குகள்பந்தலூர் அருகே உள்ள பிதிர்காடு வனத்துறை எல்லைக்குட்பட்ட பிதிர்காடு, பாட்டவயல், மாங்கோடு, கக்குண்டி, அய்யங்கொல்லி, சன்னகொல்லி, கொளப்பள்ளி, உப்பட்டி, சேலக்குன்னு, நெலாக்கோட்டை, விலங்கூர் உள்பட பல்வேறு பகுதிகளில் அடர்ந்து வனப்பகுதிகள் காணப்படுகின்றன.
இங்கு காட்டு யானைகள், சிறுத்தைப்புலிகள், மான்கள் உள்பட பல்வேறு விலங்குகளும், பறவைகளும், அரிய வகை மரங்களும் காணப்படுகின்றன. மேலும் அங்கு வன விலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுக்க தினமும் வனத்துறையினர் ரோந்து சென்று வருகிறார்கள்.
உண்ணிச்செடிகள்இந்த நிலையில் வனவிலங்குகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் லண்டானா என்று அழைக்கப்படும் உண்ணிச்செடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இந்த செடிகளால் வனவிலங்குகள் சாப்பிடும் பசுந்தீவனங்களான புற்கள், செடி, கொடிகள் போன்றவை வளருவதற்கு வழியில்லாமல், அவைகள் அழிந்து வருகின்றன.
இதனால் வனவிலங்குகள் உணவு கிடைக்காமல் ஆங்காங்கே சுற்றித்திரிகின்றன. சிலநேரங்களில் உணவு மற்றும் தண்ணீரை தேடி வனவிலங்குகள், வனப்பகுதியையொட்டியுள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்து அட்டகாசம் செய்கின்றன. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் கடுமையான பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
செடிகளை அகற்றும் பணிஇதனை தடுக்கும் வகையில் பிதிர்காடு வனப்பகுதியில் வனத்துறையினர் ஆய்வு நடத்தினார்கள். தொடர்ந்து அவர்கள் உண்ணிச்செடிகளை அகற்ற முடிவு செய்தனர். இதன்படி பிதிர்காடு வனச்சரகர் மனோகரன் தலைமையில் வனவர் பத்மநாதன், வனகாப்பாளர்கள் ஜார்ஜ் பிரவீன்சன், ராஜேஷ்குமார், நந்தகுமார் மற்றும் வனத்துறையினர் இந்த செடிகளை அகற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:–
பிதிர்காடு வனப்பகுதியில் தாவர உண்ணி விலங்குகள் அதிகமாக உள்ளன. இந்த விலங்குகளுக்கு தற்போது உணவுத்தட்டுப்பாடு நிலவுகிறது. இதற்கு காரணம் இங்குள்ள லண்டானா உண்ணிச்செடிகள் தான். இவைகள் பசுந்தீவனங்கள் வளரவிடாமல் தடுக்கின்றன. எனவே இதனை அகற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறோம். இந்த பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
மழைமேலும் மழை பெய்யாததாலும் புற்கள், செடி, கொடிகள் காய்ந்துள்ளன. உண்ணிச்செடிகளை அகற்றப்பட்ட பின்னர் மழை பெய்யும் பட்சத்தில் புற்கள் செழிப்பாக வளரும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.