போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று கூறி தனியார் கூரியர் வேனை வழிமறித்து துப்பாக்கியுடன் ஏறியவர் மாவோயிஸ்டா? போலீசார் தீவிர விசாரணை


போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று கூறி தனியார் கூரியர் வேனை வழிமறித்து துப்பாக்கியுடன் ஏறியவர் மாவோயிஸ்டா? போலீசார் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 26 Dec 2016 3:45 AM IST (Updated: 26 Dec 2016 12:42 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று கூறி தனியார் நிறுவன கூரியர் வேனை வழிமறித்து துப்பாக்கியுடன் ஏறியவர் மாவோயிஸ்டு இயக்கத்தை சேர்ந்தவரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:– வேனை வழிமற

கோவை,

போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று கூறி தனியார் நிறுவன கூரியர் வேனை வழிமறித்து துப்பாக்கியுடன் ஏறியவர் மாவோயிஸ்டு இயக்கத்தை சேர்ந்தவரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

வேனை வழிமறித்தார்

கோவை எல் அண்டு டி பைபாஸ் ரோட்டில் கடந்த 23–ந் தேதி இரவு 8 மணியளவில் தனியார் கூரியர் நிறுவனத்துக்கு சொந்தமான வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த வேனை கோவையை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 23) என்பவர் ஓட்டிச்சென்றார். பட்டணம்புதூர் பிரிவு அருகே வந்தபோது டிப் டாப் உடையணிந்த நபர் கையில் துப்பாக்கி மற்றும் வாக்கி டாக்கியுடன் அந்த வேனை வழிமறித்து உள்ளார்.

உடனே டிரைவர் வேனை நிறுத்தியதும், அந்த நபர் வேனில் ஏறியுள்ளார். அப்போது அவர், தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் என்றும், ஒரு குற்றவாளியை பிடிப்பதற்காக இங்கு வந்தேன். என்னை ஈச்சனாரி பிரிவில் இறக்கிவிடு என்று கூறியுள்ளார்.

துப்பாக்கியை விட்டுச்சென்றார்

பட்டணம்பிரிவில் இருந்து சுமார் அரை கி.மீ. தூரம் சென்றதும், எங்கள் குழுவில் உள்ள போலீசார் வெள்ளலூர் ரோட்டில் காரில் வந்துவிட்டதால் இறங்கிக்கொள்வதாக கூறியுள்ளார். உடனே கார்த்திகேயன், அந்த நபரை வெள்ளலூர் ரோட்டில் இறக்கிவிட்டு தனது கூரியர் நிறுவனத்துக்கு வந்து வேனை நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் கூரியர் நிறுவனத்துக்கு சென்ற கார்த்திகேயன் தனது வேனை சுத்தம் செய்து கொண்டு இருந்தார். அப்போது அந்த காரின் முன்பகுதியில் உள்ள ‘டேஸ்போர்டில்’ ஒரு துப்பாக்கி இருந்தது. அதை பார்த்ததும் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

போலீசிடம் ஒப்படைப்பு

பின்னர் அவர், அந்த துப்பாக்கியுடன் சூலூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று போலீசாரிடம், தனது வேனில் போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று கூறி ஏறிய நபரின் கையில் துப்பாக்கி, வாக்கி டாக்கி வைத்து இருந்தார். அவர், வேனில் துப்பாக்கியை மறந்து வைத்துவிட்டு சென்றதாகவும் தெரிவித்தார். எனவே அவர் விட்டுச் சென்ற துப்பாக்கியை ஒப்படைக்க வந்ததாக கார்த்திகேயன் கூறியுள்ளார்.

உடனே போலீசார் அந்த துப்பாக்கியை வாங்கி பார்த்தபோது, அது 7.65 எம்.எம். ரக கைத்துப்பாக்கி என்பதும், போலீசார் பயன்படுத்தும் துப்பாக்கி இல்லை என்பதும், முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்புக்காக பயன்படுத்தும் துப்பாக்கி என்பதும் தெரியவந்தது. இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

மாவோயிஸ்டு இயக்கத்தை சேர்ந்தவரா?

கோவை வழியாக பல்வேறு பகுதியில் இருந்து கேரளாவுக்கு ஹவாலா பணம் கடத்தப்படுகிறது. அந்த பணத்தை கொள்ளையடிக்க மர்ம நபர் துப்பாக்கியுடன் வந்தாரா? அல்லது அந்த நபர் மாவோயிஸ்டு இயக்கத்தை சேர்ந்தவரா? என்பது குறித்து சூலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரம்யா பாரதி உத்தரவின்பேரில் அந்த நபரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகிறார்கள்.

இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:–

சத்தம் வர வில்லை

போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று கூறி துப்பாக்கியுடன் வேனில் ஏறிய நபர் துப்பாக்கி மட்டுமல்லாமல் வாக்கி டாக்கியும் வைத்திருந்துள்ளார். ஆனால் அந்த வாக்கி டாக்கியில் இருந்து சத்தம் எதுவும் வர வில்லை என்று வேன் டிரைவர் கூறினார். எனவே அந்த வேனில் ஹவாலா பணம் கொண்டு செல்லப் படுகிறதா? என்று தெரிந்து கொள்வதற்காக அந்த நபர் போலீஸ் என்று கூறி வேனைவழிமறித்து ஏறி நோட்டமிட்டு விட்டு கீழே இறங்கி சென்று இருக்க வாய்ப்புள்ளது.

மேலும் அந்த நபர் விட்டுச்சென்ற கைத்துப்பாக்கி கொல்கத்தாவில் தயாரிக்கப்பட்டது ஆகும். வேனில் ஏறிய நபருக்கு 40 வயதுக்குள் இருக்கும். அவருடைய உடல் கட்டுக்கோப்புடன் இருப்பதாக டிரைவர் கூறியுள்ளார். எனவே அந்த நபர் மாவோயிஸ்டு இயக்கத்தை சேர்ந்தவரா? அல்லது ஹவாலா பணத்தை கொள்ளையடிக்கும் கும்பலை சேர்ந்தவரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்கள்.


Next Story