கடற்கரை கிராமங்களை புரட்டி போட்ட சுனாமி கோர தாண்டவத்தின் 12–ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது


கடற்கரை கிராமங்களை புரட்டி போட்ட சுனாமி கோர தாண்டவத்தின் 12–ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது
x
தினத்தந்தி 26 Dec 2016 4:00 AM IST (Updated: 26 Dec 2016 1:11 AM IST)
t-max-icont-min-icon

சுனாமி ஆழிப்பேரலை கோரதாண்டவமாடி வருடங்கள் கடந்தாலும், சுனாமி நினைவலைகளின் சோகம் இன்னும் குறையவில்லை. இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக 2004–ம் ஆண்டு டிசம்பர் 26–ந் தேதி காலையில் யாரும் எதிர்பாராத இதுவரை கண்டிராத சோக நிகழ்வு அர

கடற்கரை கிராமங்களை புரட்டி போட்ட சுனாமி கோர தாண்டவத்தின் 12–ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

சுனாமி ஆழிப்பேரலை கோரதாண்டவமாடி வருடங்கள் கடந்தாலும், சுனாமி நினைவலைகளின் சோகம் இன்னும் குறையவில்லை. இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக 2004–ம் ஆண்டு டிசம்பர் 26–ந் தேதி காலையில் யாரும் எதிர்பாராத இதுவரை கண்டிராத சோக நிகழ்வு அரங்கேறியது. அது தான் சுனாமி.

டிசம்பர் 25–ந் தேதி கிறிஸ்துமஸ் விழா கொண்டாடிய மகிழ்ச்சியின் உச்சியில் இருந்த கடலோர மீனவ மக்களை துயரத்தின் எல்லைக்கு எடுத்து சென்றது. அந்த சுனாமி ஆழிப்பேரலை, கடற்கரை கிராமங்களை விழுங்கியது. தமிழக கடற்கரையில் நாகப்பட்டினம், குமரி மாவட்டம், கடலூர், சென்னை, திருநெல்வேலி போன்ற மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளானது.

குமரி மாவட்டத்தில் மணக்குடி, அழிக்கால், கன்னியாகுமரி, சொத்தவிளை, குளச்சல், கொட்டில்பாடு, பிள்ளைத்தோப்பு, ராஜாக்கமங்கலம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் பேரழிவு ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான மனித உயிர்களை சுனாமி பேரலை காவு வாங்கியது. உயிர் சேதம் மட்டும் அல்லாமல், உடைமைகளையும், சொந்த பந்தங்களையும் இழந்தவர்கள் ஏராளம். அந்த கோர காட்சிகள் இன்னும் கண் முன்னே நிற்கிறது.

நினைவு ஸ்தூபிகள்

குளச்சல் கொட்டில்பாட்டை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமானவர்கள் பலியானார்கள். அவர்கள் நினைவாக அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் அருகில் நினைவு ஸ்தூபிகள் அமைக்கப்பட்டுள்ளன. கொட்டில்பாடு மீனவ கிராமத்தில் 199 பேர் அடக்கம் செய்யப்பட்டனர். அதற்காக கொட்டில்பாடு புனித அலெக்ஸ் ஆலயம் அருகில் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது.

குளச்சல் பகுதியில் மட்டும் 414 பேர் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். குளச்சல் காணிக்கை மாதா ஆலய வளாகத்தில் அவர்களின் நினைவாக ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் சுனாமிக்கு குளச்சல் பகுதியை சேர்ந்த முஸ்லிம்கள் 44 பேர் பலியானார்கள். அனைத்து உடல்களும் ரிபாய் பள்ளிவாசல் வளாகத்தில் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த கோர சம்பவத்தால் குழந்தைகளை இழந்த பெற்றோர்களும், பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளும், உற்றார்–உறவினர்களை இழந்து தவிப்பவர்களுக்கும் அது ஆறாத வடுவாக உள்ளது. அத்தகைய சூழ்நிலையில் சுனாமி கோர தாண்டவத்தின் 12–ம் ஆண்டு நினைவு தினம் இன்று (திங்கட்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி மீனவ கிராமங்களில் இறந்தவர்களின் உருவ படங்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தியும், மாலை அணிவித்தும் அஞ்சலி செலுத்துவார்கள்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் இன்றைய நிலை பற்றி காண்போம்.

சுனாமியால் குழந்தைகளை இழந்தவர்

கொட்டில்பாடு பகுதியை சேர்ந்த ஆக்னஸ் என்பவர், சுனாமியால் 4 குழந்தைகளை இழந்தவர். சுனாமி பாதிப்பு, அதிலிருந்து மீண்டது குறித்து ஆக்னஸ் கூறியதாவது:–

கொட்டில்பாடு கடற்கரையில் ஒரு குடிசை வீட்டில் மீன்பிடி தொழிலாளியான கணவர் ராஜீ, குழந்தைகள் அருண் பிரமோத் (வயது 8), பிரதிமா(6), பிரதீஷா(4), ரஞ்சிதா (2) ஆகியோருடன் வசித்து வந்தேன். சுனாமியின் போது என்னுடைய குழந்தைகள் மட்டும் வீட்டில் இருந்தனர். அப்போது நான் தண்ணீர் பிடிப்பதற்காக வெளியே சென்றேன். சிறிது நேரத்தில் கடற்கரையை விட்டு வெளியேறி ஊரை நோக்கி சிலர் பதற்றத்துடன் ஓடி வந்ததை பார்த்தேன்.

உடனே நான் ஏதோ விபரீதம் நடந்து விட்டது என்று நினைத்தபடி, வீட்டுக்கு ஓடி சென்று குழந்தைகளை தூக்கிக் கொண்டு ஓடி வந்தேன். அப்போது வந்த பல அடி உயர அலை எங்களை தூக்கி வீசியது. இதில் 4 குழந்தைகளையும் அலை உள்ளே இழுத்து சென்து விட்டது. நான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன். பலியானவர்களில் 2 பேருடைய குழந்தைகளின் உடல்களை மட்டும் பார்க்க முடிந்தது.

மறு பிறவி எடுத்துள்ளனர்

குழந்தைகளை இழந்த சோகத்தை என்னால் தாங்க முடியவில்லை. இதனால் சாகும் முடிவை தேடி பல தடவை தற்கொலை முயற்சி செய்தேன். கருத்தடை ஆபரேஷன் செய்ததால், இனிமேல் குழந்தை பாக்கியம் கிடையாது என்று எண்ணி கண்கலங்கினேன்.

அப்போது தான் தொண்டு நிறுவனத்தினரும், உறவினர்களும் என்னிடம் வந்து சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு குழந்தை பெறலாம் என்று கூறினர். அதன்படி அறுவை சிகிச்சை செய்தேன். தற்போது எனக்கு 3 குழந்தைகள் உள்ளனர். முதலில் பிறந்த குழந்தைக்கு ஆரோக்கிய பிரதீஷா என்று பெயர் சூட்டினேன் (இறந்து போன பிரதீஷாவின் நினைவாக). பிறகு ஒரு பெண் குழந்தையும், ஆண் குழந்தையும் பிறந்தது. அவர்களுக்கு ஆரோக்கிய பிரதீபா, ஆரோக்கிய பிரமோத் என்ற பெயரை வைத்தேன். பிரதீஷா 6–ம் வகுப்பும், ஆரோக்கிய பிரதீபா 5–ம் வகுப்பும், ஆரோக்கிய பிரமோத் 4–ம் வகுப்பும் படிக்கின்றனர்.

சுனாமியால் பறிகொடுத்த குழந்தைகளின் செய்கையை போலவே, தற்போது உள்ள குழந்தைகளின் செயல்பாடும் உள்ளது. இவர்கள் மறு பிறவி எடுத்து வந்துள்ளார்கள் என்று நினைக்கிறேன்.

இவ்வாறு ஆக்னஸ் உருக்கத்துடன் கூறினார்.


Next Story