நிவாரணம் வழங்க கோரி வயல்களில் கருப்புக்கொடி கட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி வயல்களில் கருப்புக்கொடி கட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டம் சோமரசம்பேட்டையை அடுத்த வயலூர் ஊராட்சி கொத்தட்டை பகுதியில் உள்ள வயல்களில் கருப்புக்கொடி கட்டியும், கைகளில் கருப்பு கொட
சோமரசம்பேட்டை
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி வயல்களில் கருப்புக்கொடி கட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
சோமரசம்பேட்டையை அடுத்த வயலூர் ஊராட்சி கொத்தட்டை பகுதியில் உள்ள வயல்களில் கருப்புக்கொடி கட்டியும், கைகளில் கருப்பு கொடி ஏந்தியும் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு த.மா.கா. விவசாய பிரிவு மாவட்டத் தலைவர் புலியூர் நாகராஜன் தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட விவசாய சங்க செயலாளர் அயிலை சிவசூரியன் முன்னிலை வகித்தார். கொத்தட்டை ராஜேந்திரன், மாவட்டத் தலைவர் செல்வம், பிரசன்னா, சின்னதுரை, தங்கவேல் உள்ளிட்ட 50–க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கு பெற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் பருவமழை பொய்த்ததால் தண்ணீர் இல்லாமல் வயல்களில் பயிரிடப்பட்ட பயிர்கள் வாடியதைக் கண்டு கடன் பெற்று விவசாயம் செய்த விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை தடுத்து நிறுத்தவேண்டும். தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சம் நிவாரண தொகை வழங்க வேண்டும்.
விவசாய கடன்
விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரமும், கருகிய நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரமும், வாழை பயிருக்கு ஏக்கருக்கு ரூ.ஒரு லட்சமும், கரும்பு மற்றும் வெற்றிலை பயிருக்கு ரூ.50ஆயிரமும் நிவாரணமாக வழங்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகள் வாழ்வாதாரத்தை காக்க 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.