தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறிப்பு: போலீஸ் நிலையங்களில் புகார்கள் குவிகின்றன


தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறிப்பு: போலீஸ் நிலையங்களில் புகார்கள் குவிகின்றன
x
தினத்தந்தி 26 Dec 2016 3:00 AM IST (Updated: 26 Dec 2016 2:33 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறித்த சம்பவங்களில் போலீஸ் நிலையங்களில் புகார்கள் குவிகிறது. இதுகுறித்து போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தொழில் அதிபர்களிடம் பணம் பறிப்பு புதுச்சேரியை சேர்ந்த தொழில் அதிபர்கள் மற்றும் ரியல் எஸ்டே

புதுச்சேரி

புதுவையில் தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறித்த சம்பவங்களில் போலீஸ் நிலையங்களில் புகார்கள் குவிகிறது. இதுகுறித்து போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

தொழில் அதிபர்களிடம் பணம் பறிப்பு

புதுச்சேரியை சேர்ந்த தொழில் அதிபர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் அதிபர்களை மிரட்டி பணம் பறித்ததாக பிரபல ரவுடிகளான மர்டர் மணிகண்டன், கர்ணா ஆகியோரையும், அவர்களுடைய கூட்டாளிகளையும் ஒதியஞ்சாலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் மர்டர் மணிகண்டனின் உறவினர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.

இந்த நிலையில் மர்டர் மணிகண்டனின் கூட்டாளியான பூமியான்பேட்டையை சேர்ந்த ரமேஷ் என்பவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், புதுவையை சேர்ந்த தொழில் அதிபர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்களை மிரட்டி பணம் பறித்ததாக தெரிவித்தார்.

கைது

இந்த வழக்கில் தொடர்புடைய உப்பளம் நேதாஜி நகரை சேர்ந்த ஜனா (வயது 32) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது புதுவையை மட்டுமல்லாமல் தமிழக பகுதியை சேர்ந்த தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறித்தது தெரிய வந்துள்ளது.

மேலும் ரவுடி கர்ணாவின் கூட்டாளியான விழுப்புரத்தை சிவா என்கிற பத்திர சிவாவுக்கு தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறித்தது குறித்த முழுவிவரம் தெரியும் என கூறியுள்ளார். அதன்பேரில் சிவாவை போலீசார் தேடி வருகிறார்கள்.

2 தனிப்படை

இந்த வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தொழில் அதிபர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்களை மிரட்டி பணம் பறித்த கும்பலை கைது செய்த தீவிர காட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் ரவுடிகளிடம் பணம் பறிகொடுத்த தொழில் அதிபர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள் தங்கள் பகுதியை சேர்ந்த போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கும்படி போலீஸ் அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். அதன்படி ரவுடிகளிடம் பணம் பறிகொடுத்தவர்கள் தங்கள் பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் புகார்கள் அளித்து வருகிறார்கள். இதனால் போலீஸ் நிலையங்களில் புகார்கள் குவிந்து வருகிறது. அந்த புகார்களை பெற்று போலீசார் ரகசியமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


Next Story