கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி இணையதளத்தில் விளம்பரம் செய்து பணம் மோசடி 4 பேர் கைது


கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி இணையதளத்தில் விளம்பரம் செய்து பணம் மோசடி 4 பேர் கைது
x
தினத்தந்தி 26 Dec 2016 3:30 AM IST (Updated: 26 Dec 2016 3:28 AM IST)
t-max-icont-min-icon

பிரபல கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி இணையதளத்தில் விளம்பரம் செய்து பணம் மோசடி செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். இணையதளத்தில் விளம்பரம் சென்னையை அடுத்த கொளத்தூர் கண்ணபிரான் நகரில் தனியார் வேலை வாய்ப்பு நிறுவனம் உள்ளது. இதை கொளத்த

தாம்பரம்

பிரபல கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி இணையதளத்தில் விளம்பரம் செய்து பணம் மோசடி செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

இணையதளத்தில் விளம்பரம்

சென்னையை அடுத்த கொளத்தூர் கண்ணபிரான் நகரில் தனியார் வேலை வாய்ப்பு நிறுவனம் உள்ளது. இதை கொளத்தூரைச் சேர்ந்த பிரபு (வயது 27), மாதவரத்தைச் சேர்ந்த கார்த்திக்(30) ஆகியோர் இணைந்து நடத்தி வந்தனர். இந்த நிறுவனத்தில் திரு.வி.க. நகரைச் சேர்ந்த அலெக்சாண்டர்(39), பெரவள்ளூரைச் சேர்ந்த அருண் விஜயகுமார்(37) ஆகியோர் வேலை பார்த்து வந்தனர்.

இந்த நிறுவனம் சார்பில் பிரபல கம்ப்யூட்டர் மென் பொருள் நிறுவனங்களில் வேலை வாங்கித்தருவதாக இணையதளத்தில் விளம்பரம் செய்தனர். அதை நம்பி பலர் இவர்களிடம் தொடர்பு கொண்ட போது குறிப்பிட்ட வங்கி கணக்கில் பணம் செலுத்த சொல்லி, பணம் செலுத்திய பின்பு போலியான பணி உத்தரவு நகலை தயாரித்து கொடுத்து அவர்களை ஏமாற்றி வந்தனர்.

என்ஜினீயரிங் பட்டதாரி

இந்த நிலையில் பம்மல் மூங்கில் ஏரி பகுதியைச் சேர்ந்த தீபன் சக்கரவர்த்தி(22) என்ற என்ஜினீயரிங் பட்டதாரி, இணையதளத்தில் வந்த இவர்களின் விளம்பரத்தை பார்த்து பிரபுவை தொடர்பு கொண்டார்.

அப்போது அவர், தாம்பரம் சானடோரியம் ஏற்றுமதி மண்டலத்தில் இயங்கி வரும் பிரபல கம்ப்யூட்டர் மென்பொருள் நிறுவனத்தில் வேலை உள்ளதாகவும், அதற்கு ரூ.50 ஆயிரம் பணம் கொடுக்கவேண்டும் எனவும், பணம் கொடுத்த உடன் வேலைக்கான உத்தரவு நகல் உடனே கொடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மடக்கி பிடித்தனர்

இதையடுத்து தாம்பரம் பகுதியில் தீபன் சக்கரவர்த்தி பணத்துடன் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த அருண் விஜயகுமார், பணத்தை வாங்கிக்கொண்டு பிரபல கம்ப்யூட்டர் மென் பொருள் நிறுவனத்தின் வேலைக்கான உத்தரவு நகலை தீபன் சக்கரவர்த்தியிடம் கொடுத்தார்.

அப்போது அவரிடம் ஏற்கனவே பணம் கொடுத்து ஏமாந்த சிலர், அருண் விஜயகுமாரை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அருண் விஜயகுமாரை மடக்கி பிடித்து தாம்பரம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

இதுதொடர்பாக பரங்கிமலை துணை கமிஷனர் கல்யாண் மேற்பார்வையில் தாம்பரம் உதவி கமிஷனர் லோகநாதன் தலைமையில் தாம்பரம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

4 பேர் கைது

அதில் தீபன் சக்கரவர்த்தியிடம் கொடுத்தது பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட பணி உத்தரவு நகல் என்பது தெரிந்தது. இதுவரை வங்கி மூலம் பணம் கட்டச்சொல்லி வந்த மோசடி கும்பல், தற்போது வங்கியில் கெடுபிடி உள்ளதால் பணத்தை நேரில் செலுத்த சொல்லியதும் தெரியவந்தது.

உடனே அருண் விஜயகுமார் மூலம் மற்ற 3 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள், வேலை வாய்ப்பு நிறுவனம் நடத்தி பலரை ஏமாற்றி பல லட்சம் ரூபாய் வரை மோசடி செய்தது தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த தாம்பரம் குற்றப்பிரிவு போலீசார் பிரபு, கார்த்திக், அலெக்சாண்டர், அருண் விஜயகுமார் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் பணத்தையும், மோசடி பணத்தில் அவர்கள் வாங்கிய 11 பவுன் தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான 4 பேரையும் தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story