பரங்கிமலையில் ஆயுதப்படை போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை


பரங்கிமலையில் ஆயுதப்படை போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
x
தினத்தந்தி 26 Dec 2016 4:30 AM IST (Updated: 26 Dec 2016 3:48 AM IST)
t-max-icont-min-icon

பரங்கிமலை இணை கமிஷனர் அலுவலகத்தில் பணிச்சுமையால் ஆயுதப்படை போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். பணிச்சுமை மற்றும் தலைவலியால் தற்கொலை செய்து கொள்வதாக அவர் கடிதம் எழுதி வைத்து உள்ளார். ஆயுதப்படை போலீஸ்காரர் தற்கொலை சென்னையை அடுத்த ப

ஆலந்தூர்,

பரங்கிமலை இணை கமிஷனர் அலுவலகத்தில் பணிச்சுமையால் ஆயுதப்படை போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். பணிச்சுமை மற்றும் தலைவலியால் தற்கொலை செய்து கொள்வதாக அவர் கடிதம் எழுதி வைத்து உள்ளார்.

ஆயுதப்படை போலீஸ்காரர் தற்கொலை

சென்னையை அடுத்த பரங்கிமலை இணை கமிஷனர் அலுவலகத்தில் உள்ள ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தவர் கோபிநாத் (வயது 23). பரங்கிமலை சென்னை தெற்கு இணை கமிஷனர் அலுவலகத்தில் உள்ள ஆயுதப்படை கிடங்கில் நேற்று முன்தினம் இரவு கோபிநாத் பணியில் ஈடுபட்டு இருந்தார்.

நேற்று அதிகாலை கோபிநாத்தை பணிமாற்ற மற்றொரு ஆயுதப்படை போலீஸ்காரர் குமரேசன் என்பவர் அங்கு வந்தார். அப்போது கோபிநாத், பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்த நிலையில், அவரது தலை சிதைந்து ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

கோபிநாத், பாதுகாப்பு பணியின் போது வழங்கிய துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. அவர் நாற்காலியில் அமர்ந்தபடி தனது 2 கால்களுக்கும் நடுவே துப்பாக்கியை மேல் நோக்கி வைத்து இடதுபக்க தாடையை குறித்து சுட்டு உள்ளார். இதில் தாடை வழியாக பாய்ந்த குண்டு இடது பக்க கண் வழியாக வெளியே வந்து உள்ளது. இதில் இடது கண் வெளியே வந்ததுடன், தலையும் சிதறி தொங்கியது.

பணிச்சுமை

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸ்காரர் குமரேசன், உடனடியாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். பரங்கிமலை போலீசார் விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த கோபிநாத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

முன்னதாக கோபிநாத்தின் சட்டை பையில் இருந்து ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் அவர், ‘‘எனக்கு மிகுந்த பணிச்சுமை மற்றும் தலைவலியின் காரணமாக தற்கொலை செய்து கொள்கிறேன். இப்படிக்கு ஆர்.கோபிநாத்’’ என அவரது கைப்பட எழுதி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுபற்றி பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரையை சேர்ந்தவர்

தற்கொலை செய்து கொண்ட கோபிநாத்தின் சொந்த ஊர் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஆகும். இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர், பழனி பட்டாலியனில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் போலீஸ்காரராக பணியாற்றிவிட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் பரங்கிமலையில் உள்ள ஆயுதப்படை போலீஸ்காரர் பணிக்கு மாற்றப்பட்டு உள்ளார்.

பரங்கிமலை ஆயுதப்படைக்கு வந்த கோபிநாத் அதிகமான பணிச்சுமை காரணமாக மதுரை அல்லது திண்டுக்கல் பகுதிகளுக்கு பணிமாற்றம் கேட்டு இருந்ததாகவும், அதிக பணி மற்றும் பணி இடமாற்றம் கிடைக்காததால் அவர் மனம் உடைந்து இருந்ததாகவும், சரியான தூக்கம் இல்லாததால் தலைவலியால் அவர் அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுபற்றி ஆயுதப்படை போலீஸ்காரர்கள் கூறியதாவது:–

சம்பளம் இல்லை

சென்னையில் நடக்கும் போராட்டம், சாலை மறியல், ஆர்ப்பாட்டம், பாதுகாப்பு உள்பட அனைத்து பணிகளுக்கும் ஆயுதப்படை போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர். நீண்ட நேரமாக பணியில் இருக்கும் எங்களுக்கு தொடர்ந்து பணிகள் வழங்கப்படுகிறது. உடல்நலம் சரியில்லை என விடுப்பு கேட்டால் ஆயுதப்படை அதிகாரிகள் எங்களை மதிப்பது கிடையாது.

தற்போது ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட போலீஸ்காரர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. உணவு படியாக மாதந்தோறும் வழங்கப்படும் பணமும் வழங்கப்படவில்லை. கடன் வாங்கி சாப்பிடும் நிலை உள்ளது. இதனால் ஆயுதப்படையில் பணிபுரியும் எங்களுக்கு மனஉளைச்சல் ஏற்படுகிறது.

கோபிநாத் கடுமையான தலைவலியாக இருக்கிறது. இரவு பணி போட வேண்டாம் எனக்கூறியும் அதிகாரிகள் அவருக்கு இரவு பணிக்கு வந்து தான் ஆகவேண்டும் என கூறி இரவு பணி போட்டு உள்ளனர். இதனால் ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக அவர் தற்கொலை செய்து இருக்கலாம்.

இவ்வாறு அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

வெடிச்சத்தம்

துப்பாக்கியால் சுட்டு கோபிநாத் தற்கொலை செய்த போது பயங்கர வெடி சத்தம் கேட்டு உள்ளது. ஆனால் கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் பட்டாசு வெடித்து இருக்கலாம் என்று நினைத்து இருந்து விட்டதாகவும், நேற்று அதிகாலை கோபிநாத்தை பணிமாற்றம் செய்ய போலீஸ்காரர் குமரேசன் அங்கு சென்ற போதுதான் கோபிநாத் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரிய வந்ததாகவும் அங்கிருந்த மற்ற போலீசார் தெரிவித்தனர்.

அதுவரையில் தற்கொலை செய்து கொண்ட போலீஸ்காரர் கோபிநாத் உடல் நாற்காலிலேயே அமர்ந்த நிலையில் இருந்து உள்ளது.

இதற்கிடையில் கோபிநாத் தற்கொலை செய்துகொண்ட தகவல் அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் சென்னைக்கு விரைந்தனர்.


Next Story