போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு பெண் தர்ணா போராட்டம் கொலை மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக நுழைவு வாயிலில் ஒரு பெண் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தனக்கு, கொலை மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்தார். தர்ணா போராட்டம் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக நுழைவு வாயிலில் ஒரு பெண் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தனக்கு, கொலை மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்தார்.
தர்ணா போராட்டம்திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா நாயக்கன்பாளையம் சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவருடைய மனைவி வள்ளியம்மாள் (வயது 52). இவர், நேற்று மதியம் 12 மணியளவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து திடீரென கதறி அழுதபடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனார்.
அங்கு, பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்து வள்ளியம்மாளிடம் விசாரித்தனர். அதற்கு அவர், தனது கணவர் ஏழுமலையை கொலை செய்தவர்கள் என்னையும் கொலை செய்ய போவதாக மிரட்டல் விடுத்து வருகிறார்கள். மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கொடுத்த மனுவின் மீது போலீசார் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தான் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறினார்.
அதிகாரியிடம் மனுஇதுதொடர்பாக போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுங்கள் என்று கூறி, வள்ளியம்மாளை போலீசார், போலீஸ் சூப்பிரண்டு பொன்னியிடம் அழைத்துச் சென்றனர். அவர், போலீஸ் சூப்பிரண்டு பொன்னியிடம் மேற்கண்ட விவரங்களை கூறி ஒரு புகார் மனுவை கொடுத்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:–
எனது கணவர் ஏழுமலையின் முதல் மனைவி சந்திரா. முதல் மனைவிக்கு ரவி என்கிற மகனும், அமுதா என்ற மகளும் உள்ளனர். சந்திரா, என்னை ஏழுமலைக்கு 2–வதாக திருமணம் செய்து வைத்தார். சந்திரா குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக நானும், எனது கணவர் ஏழுமலையும் ஆரணி நாயக்கன்பாளையம் சைதாப்பேட்டையில் வசித்து வந்தோம்.
கடந்த மாதம் 22–ந்தேதி சந்திரா, ரவி மற்றும் அவரது மனைவி சுபாஷினி, அமுதா மற்றும் அவரது கணவர் பாமுருகன் ஆகியோர் வீட்டுக்கு வந்து ஏழுமலையை சரமாரியாக தாக்கி ரத்தம் சொட்ட காரில் தூக்கிப்போட்டு கடத்திச் சென்றனர். அவர்களை தடுக்க முயன்ற என்னையும் அவர்கள் அடித்துக்கொலை செய்ய முயன்றனர்.
நடவடிக்கை எடுப்பதாக உறுதிஇதையறிந்த நான், கடந்த மாதம் 25–ந்தேதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தேன். அதன்பேரில் 26–ந் தேதி ஆரணி நகர போலீஸ் நிலையத்தில் விசாரணை நடந்தது. அப்போது ரவி, தனது தந்தை ஏழுமலை மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டார், அவரை அவலூர்பேட்டை சுடுகாட்டில் வைத்து எரித்து விட்டதாக போலீசாரிடம் கூறினார். புகாரின் பேரில் ஆரணி நகர போலீசார், ரவி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்ததுடன் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனது கணவர் ஏழுமலையை அடித்துக்கொலை செய்து விட்டார்கள் என சந்தேகிக்கிறேன். மேலும் என்னையும் கொலை செய்யப் போவதாக ரவி மிரட்டல் விடுத்து வருகிறார். எனவே கொலை மிரட்டல் விடுத்த ரவி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி, மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.