கடலூரில் 12–ம் ஆண்டு சுனாமி தினம் அனுசரிப்பு: கடலில் பால் ஊற்றியும், நினைவுத்தூணில் மலர் தூவியும் மக்கள் கண்ணீர் அஞ்சலி மீனவ அமைப்பினர் மவுன ஊர்வலம்


கடலூரில் 12–ம் ஆண்டு சுனாமி தினம் அனுசரிப்பு: கடலில் பால் ஊற்றியும், நினைவுத்தூணில் மலர் தூவியும் மக்கள் கண்ணீர் அஞ்சலி மீனவ அமைப்பினர் மவுன ஊர்வலம்
x
தினத்தந்தி 27 Dec 2016 4:30 AM IST (Updated: 26 Dec 2016 10:49 PM IST)
t-max-icont-min-icon

கடலூரில் 12–ம் ஆண்டு சுனாமி தினத்தையொட்டி கடலில் பால் ஊற்றியும், நினைவுத் தூணில் மலர் தூவியும் மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மீனவ அமைப்பினர் மவுனமாக ஊர்வலம் சென்றனர். சுனாமி நினைவு தினம் கடந்த 2004–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26–ந்தேதி இந்தோனேஷியா அர

கடலூர்,

கடலூரில் 12–ம் ஆண்டு சுனாமி தினத்தையொட்டி கடலில் பால் ஊற்றியும், நினைவுத் தூணில் மலர் தூவியும் மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மீனவ அமைப்பினர் மவுனமாக ஊர்வலம் சென்றனர்.

சுனாமி நினைவு தினம்

கடந்த 2004–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26–ந்தேதி இந்தோனேஷியா அருகே உள்ள சுமத்ரா தீவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் எழுந்த சுனாமி பேரலைகள் தமிழக கடற்கரையை தாக்கி, ஆயிரக்கணக்கானவர்களை பலிவாங்கியது. கடலூர் மாவட்டத்தில் மட்டும் சுனாமி பேரலையில் சிக்கி 610 பேர் பலியானார்கள்.

சுனாமி பேரலையால் பலியானவர்களின் 12–ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் உள்ள சுனாமி நினைவுத்தூணுக்கு சுனாமியில் பலியானவர்களின் உறவினர்கள் மலர் வளையம் வைத்தும், பொதுமக்கள் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார்கள். சில பெண்கள் கடலில் பால் ஊற்றியும், துக்கம் தாங்காமல் மார்பில் அடித்து ஒப்பாரி வைத்து அழுதனர்.

மீனவர் வாழ்வுரிமை இயக்கம்

தமிழ்நாடு, புதுச்சேரி மீனவர் வாழ்வுரிமை இயக்க நிறுவன தலைவர் ஏகாம்பரம் தலைமையில் அந்த இயக்கத்தினர் சுனாமி நினைவுத்தூணுக்கு மலர் வளையம் வைத்தும், கடலில் பால் ஊற்றி, மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார்கள். சுனாமி நினைவுத்தூணுக்கு மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். கடலூர் மாவட்ட விளையாட்டு அதிகாரி ராஜா தலைமையில் விளையாட்டு வீராங்கனைகள் சுனாமி நினைவுத்தூணுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

12 ஆண்டுகள் ஆனாலும் கடற்கரை கிராமங்களில் சுனாமியால் ஏற்பட்ட சோகம் இன்னும் ஆறவில்லை. சுனாமியால் இறந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் வண்ணமாக கடலூர் மாவட்ட மீனவர்கள் யாரும் நேற்று மீன்பிடி தொழிலுக்கும், மீன் வியாபாரத்துக்கும் செல்லவில்லை. இதனால் திருப்பாதிரிப்புலியூர், மஞ்சக்குப்பம், முதுநகர், கிஞ்சம்பேட்டை ஆகிய இடங்களில் மீன்மார்க்கெட்டுகள் நேற்று அடைக்கப்பட்டு இருந்தன.


Next Story