தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.1 கோடியே 38 லட்சம் கையாடல்; 2 பேர் கைது


தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.1 கோடியே 38 லட்சம் கையாடல்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 27 Dec 2016 4:15 AM IST (Updated: 26 Dec 2016 10:52 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரிஅருகே கே.கே.மோதூரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.1 கோடியே 38 லட்சம் கையாடல் செய்த முன்னாள் எழுத்தர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். போலி ஆவணங்கள் தர்மபுரி மாவட்டம் கே.கே.மோதூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு

தர்மபுரி,

தர்மபுரிஅருகே கே.கே.மோதூரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.1 கோடியே 38 லட்சம் கையாடல் செய்த முன்னாள் எழுத்தர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

போலி ஆவணங்கள்

தர்மபுரி மாவட்டம் கே.கே.மோதூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் கடந்த 4.11.2011–ம் ஆண்டு முதல் 15.7.2015–ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் பொறுப்பில் இருந்த சங்கத்தின் முன்னாள் செயலாளர் சகாதேவன், முன்னாள் எழுத்தர்கள் பூதாளன், கந்தையன், சங்க தலைவர் மாது, நகை மதிப்பீட்டாளர் மாதையன் ஆகியோர் கூட்டாக சேர்ந்து மோசடியில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன.

இதுதொடர்பாக கூட்டுறவு துணை பதிவாளர், சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நேரடி ஆய்வு நடத்தினார். அப்போது புகாரில் சிக்கிய 5 பேரும், சங்கத்தில் தங்க நகைகளை ஈடுவைக்காமலேயே சங்க உறுப்பினர்களுக்கு நகைக்கடன் வழங்கியதாக போலி ஆவணங்கள் தயாரித்து, நகைக்கடன் பதிவேடுகளில் பொய்கணக்கு எழுதி மோசடி செய்து இருப்பது தெரியவந்தது.

பணம் கையாடல்

மேலும் நகை கடன்தாரர்களிடம் பெற்ற அடமான நகைகள் மீட்கப்படாத நிலையில், இவர்களே பணத்தை செலுத்தி நகைகளை கையாடல் செய்திருப்பதும் தெரிந்தது. சங்கத்தின் நடப்பு கணக்குகளில் இருந்து காசோலை மூலம் தொகைகளை எடுத்து வந்து அந்த காசோலைகளை வங்கி கணக்கில் வரவு வைக்காமல் கையாடல் செய்திருப்பதும் ஆய்வில் தெரியவந்தது.

கே.கே.மோதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 5 பேரும் சேர்ந்து மொத்தமாக ரூ.1 கோடியே 38 லட்சத்து 20 ஆயிரத்து 376 கையாடல் செய்து இருப்பது தெரியவந்தது. இதில் சங்க செயலாளர் சகாதேவன் ரூ.39 லட்சம் தொகையை திரும்பி செலுத்தி இருப்பதும் விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து பூதாளன், கந்தையன் ஆகியோர் மீது துறைரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

2 பேர் கைது

இந்த கையாடலில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வணிக குற்றப்புலனாய்வு போலீஸ் சூப்பிரண்டிடம் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் புகார் அளித்தனர். இந்த புகார் தொடர்பாக வணிக குற்றப்புலனாய்வு போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரி, சேலம் உட்கோட்ட துணை சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோரின் உத்தரவுப்படி தர்மபுரி வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி, சப்–இன்ஸ்பெக்டர் கோமதி ஆகியோர் புகாரில் சிக்கிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் உள்ள முன்னாள் எழுத்தர்கள் பூதாளன்(வயது 49) கந்தையன்(47) ஆகிய 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். இதுதொடர்பாக மேலும் 3 பேரை தேடி வருகிறார்கள்.


Next Story