பொய்யப்பட்டி காப்புக்காட்டில் மான் வேட்டையாடியவர் கைது இறைச்சி, மோட்டார் சைக்கிள் பறிமுதல்


பொய்யப்பட்டி காப்புக்காட்டில் மான் வேட்டையாடியவர் கைது இறைச்சி, மோட்டார் சைக்கிள் பறிமுதல்
x
தினத்தந்தி 27 Dec 2016 4:00 AM IST (Updated: 26 Dec 2016 10:54 PM IST)
t-max-icont-min-icon

பொய்யப்பட்டி காப்புக்காட்டில் மான் வேட்டையாடி கறியுடன் வந்தவரை வனத்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து இறைச்சி, மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மான் வேட்டை தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள பொய்யப்பட்டி காப்புக்காடு பகுதியில் மான

அரூர்,

பொய்யப்பட்டி காப்புக்காட்டில் மான் வேட்டையாடி கறியுடன் வந்தவரை வனத்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து இறைச்சி, மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

மான் வேட்டை

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள பொய்யப்பட்டி காப்புக்காடு பகுதியில் மான் வேட்டையாடுவதாக அரூர் மாவட்ட வன அலுவலர் செண்பகபிரியாவுக்கு தகவல் கிடைத்தது. அவருடைய உத்தரவின் பேரில் மொரப்பூர் வனச்சரக அலுவலர் கிருஷ்ணன், தீர்த்தமலை வனச்சரக அலுவலர் குமரவேல் ஆகியோர் தலைமையில் வனத்துறை ஊழியர்கள் வேடியப்பன், சுப்பிரமணி, கன்னியப்பன், கிருஷ்ணன், மணிகண்டன் ஆகியோர் கொண்ட குழுவினர் பொய்யப்பட்டி காப்புக்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது காப்புக்காட்டில் இருந்து 2 பேர் மோட்டார் சைக்கிளில் சாக்குமூட்டையுடன் வந்தனர். அவர்கள் வனத்துறையினரை கண்டதும் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து இருந்தவர் இறங்கி தப்பி ஓடினார். இதனால் சந்தேகம் அடைந்த வனத்துறையினர் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவரை மடக்கி பிடித்தனர். பின்னர் சாக்குமூட்டையை பிரித்து பார்த்த போது சிறிய பேரலில் மான் இறைச்சி (கறி) இருப்பது தெரியவந்தது.

ஒருவர் கைது

இதனால் அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் சட்டையம்பட்டி கிராமத்தை சேர்ந்த மாதையன் (வயது50) என்பதும், தப்பி ஓடியவர் சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை சேர்ந்த வைத்தி என்பதும் தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் வனப்பகுதியில் மான், காட்டுப்பன்றிகளை வேட்டையாடி சேலம், தாரமங்கலம், ஓமலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இறைச்சியை விற்பனை செய்ய கொண்டு சென்றது தெரியவந்தது.

இதையடுத்து மாதையனை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து இறைச்சி, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய வைத்தியை பிடிக்க வனத்துறை சார்பில் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். வன விலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரூர் மாவட்ட வன அலுவலர் செண்பகபிரியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story