குண்டாற்றில் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் அதிகாரிகளிடம் பொதுமக்கள் வலியுறுத்தல்
திருமங்கலம் அருகே உள்ள குண்டாற்றில் மணல் கொள்ளையை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். பழமையான ஆறு திருமங்கலம் நகரை ஒட்டி பழமையான காட்டாறு வகையை சேர்ந்த குண்டாறு
திருமங்கலம்,
திருமங்கலம் அருகே உள்ள குண்டாற்றில் மணல் கொள்ளையை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பழமையான ஆறுதிருமங்கலம் நகரை ஒட்டி பழமையான காட்டாறு வகையை சேர்ந்த குண்டாறு செல்கிறது. உசிலம்பட்டி, சாப்டூர் மலை பகுதிகளில் பெய்யும் மழையின் போது, ஓடைகளில் வெள்ளம் ஏற்பட்டு, கண்மாய்கள் நிரம்பி வழிந்து, மிகுதி நீர் சிற்றோடை வழியாக திருமங்கலம் பகுதிக்கு வருகிறது. அங்கிருந்து சாத்தங்குடி அருகே குண்டாறாக உருவாகிறது.
பல வருடங்களுக்கு முன்பு வைகை ஆற்றில் வெள்ளம் வரும் சமயங்களில், விக்கிரமங்கலம் கால்வாய் வழியே தண்ணீர் வந்து கண்மாய்கள் நிரம்பி, அதிலிருந்து மிகுதி நீர் திருமங்கலம் கண்மாய்களுக்கு வந்து நிரம்பிய பின்பு குண்டாற்றுக்கு வரும். அதனால் 40 வருடங்களுக்கு முன்பு வரை குண்டாற்றில் நீரோட்டம் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் குண்டாறு வறண்டு மேடாகி போனதால், சாத்தங்குடியில் இருந்து திருமங்கலம் ஆறு கண் ரெயில்வே பாலம் வரை தூர்வாரப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்பட்டது.
மணல் கொள்ளைஅதன்பின்பு கோடை மழை பெய்யும் சமயங்களில் ஆற்றில் வெள்ளம் ஓடியது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை பெய்யாததால், குண்டாறு வறண்டு கிடக்கிறது. வறண்ட ஆற்றில் ஆங்காங்கே சீமை கருவேல மரங்கள் முளைத்து வருகிறது. அதை பயன்படுத்தி குண்டாற்று பகுதியான கண்டுகுளம், மாம்பட்டி இடையே உள்ள சில இடங்களில் சிலர் தொடர்ந்து மணலை அள்ளி செல்கின்றனர்.இதனால் அந்த பகுதியில் பள்ளம் உருவாகி உள்ளது.
அதிலும் ஒரே இடத்தில் மணலை தோண்டி எடுத்து சென்றதால், அங்கு சுமார் 8 அடி ஆழத்திற்கு பெரிய அளவிலான பள்ளம் தோன்றி உள்ளது. ஏற்கனவே திருமங்கலம் பகுதியில் நிலத்தடி நீர் உவர்ப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் குண்டாற்றில் தொடர்ந்து மணல் கொள்ளை நடந்து வருவதால், நிலத்தடி நீர் அதள பாதாளத்திற்கு செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக, பொதுமக்களும், சமூகஆர்வலர்களும் கூறிவருகின்றனர்.
குண்டாற்று மணல் கொள்ளை குறித்து பொதுமக்கள் திருமங்கலத்தை சேர்ந்த ராஜாராம் மோகன்ராம் ஆகியோர் தலைமையில் அதிகாரிகளிடம் மனுக்கொடுத்து, கொள்ளையை தடுக்க வலியுறுத்தினர். மேலும் இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.