திண்டிவனத்தில் 2 வீடுகளில் 25 பவுன் நகை கொள்ளை நள்ளிரவில் கைவரிசை காட்டிய மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


திண்டிவனத்தில் 2 வீடுகளில் 25 பவுன் நகை கொள்ளை நள்ளிரவில் கைவரிசை காட்டிய மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 27 Dec 2016 4:30 AM IST (Updated: 26 Dec 2016 11:48 PM IST)
t-max-icont-min-icon

திண்டிவனத்தில் 2 வீடுகளில் 25 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் கைவரிசையை காட்டிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நகை கொள்ளை திண்டிவனம் ஈஸ்டன்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஆதிபுகழ். பழக்கடை உரிமையாளர். இவருடைய சகோதரர்கள் ஆதிசேஷன

திண்டிவனம்,

திண்டிவனத்தில் 2 வீடுகளில் 25 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் கைவரிசையை காட்டிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நகை கொள்ளை

திண்டிவனம் ஈஸ்டன்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஆதிபுகழ். பழக்கடை உரிமையாளர். இவருடைய சகோதரர்கள் ஆதிசேஷன்,செல்வம், ஆனந்தகுமார். இவர்கள் 4 பேரும் அடுத்தடுத்து வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆதிபுகழ், ஆதிசேஷன், செல்வம் ஆகிய 3 பேரும் தங்களது வீடுகளை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் அவரவர் உறவினர் வீடுகளுக்கு சென்றனர். இந்த நிலையில் நள்ளிரவில் மர்மநபர்கள் சிலர் ஆதிபுகழ், ஆதிசேஷன் ஆகியோரின் வீடுகளுக்குள் புகுந்தனர். பின்னர் அங்கிருந்த பீரோக்களை உடைத்து நகைகளை கொள்ளையடித்தனர். தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த தாஜ்பாஷா என்பவரின் வீட்டுக்குள் புகுந்தும் அங்கிருந்த பீரோவை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்தனர்.

சத்தம் கேட்டு எழுந்த தாஜ்பாஷா குடும்பத்தினர் திருடன், திருடன் என கூச்சலிடவே மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இது குறித்த தகவலின் பேரில் திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு வீமராசு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆதிபுகழ், ஆதிசேஷன், செல்வம் ஆகியோர் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் அவர்களுடைய வீட்டுக்குள் புகுந்தனர். பின்னர் அவர்கள் ஆதிபுகழ் வீட்டில் இருந்த 18 பவுன் நகை, ஆதிசேஷன் வீட்டில் இருந்த 7 பவுன் நகை ஆகியவற்றை கொள்ளையடித்துள்ளனர். செல்வம் வீட்டில் பணம் மற்றும் நகைகள் ஏதும் இல்லாததால் அங்கு கொள்ளையடிக்காமல் சென்றுள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து விசாரணை

தொடர்ந்து மர்மநபர்கள் தாஜ்பாஷாவின் வீட்டில் கொள்ளையடிக்க முயன்றபோது, அவர்களின் குடும்பத்தினர் கூச்சலிட்டதால் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து கைரேகை நிபுணர் ஸ்ரீதர் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த வீடுகளில் இருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டன. தொடர்ந்து மோப்பநாய் ராக்கி வரவழைக்கப்பட்டது. கொள்ளை நடந்த வீடுகளில் இருந்து மோப்பம்பிடித்தபடி சென்ற அந்த நாய் அங்குள்ள பூதேரி பகுதியில் நின்றுகொண்டிருந்த ஒருவர் முன் சென்று நின்றது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் திண்டிவனத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story