பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் மாமியார், நாத்தனாருக்கு தலா 10 ஆண்டு சிறை தஞ்சை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் மாமியார், நாத்தனாருக்கு தலா 10 ஆண்டு சிறை தஞ்சை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 27 Dec 2016 4:00 AM IST (Updated: 26 Dec 2016 11:54 PM IST)
t-max-icont-min-icon

பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் மாமியார், நாத்தனாருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தஞ்சை மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது. பெண் தற்கொலை தஞ்சை வெண்ணாற்றங்கரை சத்திய கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் சுதந்திரநாதன். இவருடைய மனைவி கலைச்செல்வி(வயது6

தஞ்சாவூர்,

பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் மாமியார், நாத்தனாருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தஞ்சை மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

பெண் தற்கொலை

தஞ்சை வெண்ணாற்றங்கரை சத்திய கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் சுதந்திரநாதன். இவருடைய மனைவி கலைச்செல்வி(வயது60). இவர்களுக்கு தட்சிணாமூர்த்தி என்ற மகனும், தீபபிரியா என்ற மகளும் உள்ளனர். தட்சிணாமூர்த்திக்கும், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வடகரை தாமரைகுளம் பகுதியை சேர்ந்த வைதேகி மகள் மகாலட்சுமிக்கும் திருமணம் நடைபெற்றது. தீபபிரியாவுக்கும் புதுக்கோட்டை கீழராஜவீதியை சேர்ந்த சேகருக்கும் திருமணம் நடந்தது. இந்தநிலையில் தட்சிணாமூர்த்தி வேலைக்காக சிங்கப்பூருக்கு சென்றார். தொடர்ந்து 10 ஆண்டுகளாக அவர் சொந்த ஊருக்கு வரவில்லை.

அவருடன் செல்போன் மூலம் பேசுவதற்கு கூட மகாலட்சுமியை அனுமதிக்காமல், அவரை ஆட சொல்லியும், பாட சொல்லியும், தகாத வார்த்தைகளால் திட்டியும் கலைச்செல்வியும், தீபபிரியாவும் கொடுமைப்படுத்தி வந்தனர். மேலும் அவருக்கு தனியாக ஒரு இடத்தை ஒதுக்கி கொடுத்து, துணிமணிகளை வீட்டிற்குள் கொண்டு வரவிடாமல் தடுத்ததுடன், தட்சிணாமூர்த்திக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க உள்ளதாகவும் துன்புறுத்தி மனஉளைச்சலை ஏற்படுத்தினர். இதனால் கடந்த 2015–ம் ஆண்டு ஜனவரி மாதம் 6–ந் தேதி வீட்டின் கொல்லைப்புற பாதையில் உள்ள ஒரு கட்டிடத்தில் மின் விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு மகாலட்சுமி தற்கொலை செய்து கொண்டார்.

தலா 10 ஆண்டு சிறை

இது குறித்து மகாலட்சுமியின் தாய் வைதேகி தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து கலைச்செல்வி, தீபபிரியா ஆகிய 2 பேரையும் கைது செய்து தஞ்சை மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை நீதிபதி விசாரணை செய்து கலைச்செல்வி, தீபபிரியா ஆகிய 2 பேருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் தலா 6 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். அரசு தரப்பில் வக்கீல் கண்ணகி ஆஜராகி வாதாடினார்.


Next Story