ஈரோட்டில் கனிராவுத்தர் குளம் மீட்பு இயக்கத்தினர் காலவரையற்ற உண்ணாவிரதம்
ஈரோட்டில் கனிராவுத்தர் குளம் மீட்பு இயக்கத்தினர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். கனிராவுத்தர் குளம் ஈரோடு கனிராவுத்தர் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும், குளத்தை தூர்வாரி தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற
ஈரோடு,
ஈரோட்டில் கனிராவுத்தர் குளம் மீட்பு இயக்கத்தினர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கனிராவுத்தர் குளம்ஈரோடு கனிராவுத்தர் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும், குளத்தை தூர்வாரி தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கனிராவுத்தர் குளம் மீட்பு இயக்கம் தொடங்கப்பட்டு உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் உள்பட பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு கனிராவுத்தர் குளத்தின் கரையோரம் இருந்த 40–க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டன. மேலும், கனிராவுத்தர் குளத்தை தூர்வார தமிழக அரசு ரூ.4 கோடி நிதி ஒதுக்கியது. ஆனால் இதுவரை கனிராவுத்தர் குளத்தை தூர்வாருவதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை.
உண்ணாவிரத போராட்டம்இதைத்தொடர்ந்து குளத்தை உடனடியாக தூர்வாரக்கோரி கனிராவுத்தர் குளம் மீட்பு இயக்கத்தினர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை ஈரோடு சூளை ஈ.பி.பி.நகரில் நேற்று காலை தொடங்கினார்கள். போராட்டத்துக்கு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நிலவன் தலைமை தாங்கினார்.
இந்த போராட்டத்தில், கனிராவுத்தர் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும். ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.4 கோடியை பயன்படுத்தி குளத்தை தூர்வாரும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும். ஈரோடு மாநகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்க வேண்டும். காவிரி ஆற்றில் குப்பைகள், மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் காந்தி மக்கள் இயக்க மாவட்ட பொதுச்செயலாளர் பெரியசாமி, இயக்கத்தின் பொறுப்பாளர்கள் பழனிசாமி, வெங்கடாசலம், சுரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.