அடுத்தடுத்து 2 யானைகள் சாவு எதிரொலி: தெப்பக்காடு யானைகள் முகாம் தற்காலிகமாக மூடப்பட்டது யானை சவாரியும் ரத்து
முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் அடுத்தடுத்து 2 யானைகள் இறந்ததை தொடர்ந்து நேற்று மாலை முதல் தற்காலிகமாக முகாம் மூடப்பட்டது. மேலும் யானை சவாரியும் ரத்து செய்யப்பட்டது. சுற்றுலா பயணிகள் வருகை முதுமலை புலிகள் காப்பகமானது வனவிலங்குகளின் புகலிடமாகவும்,
மசினகுடி
முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் அடுத்தடுத்து 2 யானைகள் இறந்ததை தொடர்ந்து நேற்று மாலை முதல் தற்காலிகமாக முகாம் மூடப்பட்டது. மேலும் யானை சவாரியும் ரத்து செய்யப்பட்டது.
சுற்றுலா பயணிகள் வருகைமுதுமலை புலிகள் காப்பகமானது வனவிலங்குகளின் புகலிடமாகவும், சிறந்த சுற்றுலா தலமாகவும் திகழ்ந்து வருகிறது. இதனால் ஒரு ஆண்டிற்கு சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் முதுமலைக்கு வந்து இங்குள்ள வனவிலங்குகளை கண்டு ரசித்து செல்கின்றனர்.
அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் முதுமலை புலிகள் காப்பகத்திற்குள் வாகன சவாரி மற்றும் யானை சவாரி மூலமாக சென்று வனப்பகுதியையும் வனவிலங்குகளையும் கண்டு ரசித்து வருகின்றனர். அத்துடன் தெப்பகாட்டில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளையும், அவற்றிற்கு உணவு வழங்குவதையும் பார்த்து செல்கின்றனர்.
தற்காலிகமாக முகாம் மூடல்இந்தநிலையில் திருவண்ணாமலையில் இருந்து பிடித்து வரப்பட்ட நர்மதா மற்றும் பாரதி ஆகிய 2 யானைகள் தொடர்ந்து இறந்ததால் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் நேற்று மாலை முதல் தற்காலிகமாக மூடபட்டது. இது குறித்து முதுமலை புலிகள் காப்பக துணை கள இயக்குனர் சரவணனிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:–
நர்மதா யானை வயிற்றுப்போக்கு மற்றும் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தது. அதன் உடற்கூறு பாகங்கள் ரசாயன பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த பரிசோதனையின் அறிக்கை இன்னும் வரவில்லை. அதற்குள் பாரதி யானையும் இறந்துள்ளது. இதற்கான காரணம் தெரியவில்லை. இதனால் தெப்பகாட்டில் உள்ள வளர்ப்பு யானை முகாம் தற்காலிகமாக மூடப்படுகிறது.
அத்துடன் முகாமில் உள்ள 22 யானைகளும் பேம்பெக்ஸ் மற்றும் போங்குரவயல் ஆகிய முகாம்களுக்கு உடனடியாக கொண்டு செல்லப்படுகிறது. இதில் பாமா, இந்தர், காமாட்சி, அண்ணா ஆகிய 4 யானைகளுக்கு வயதான காரணத்தால் மற்ற முகாம்களுக்கு அழைத்து செல்ல முடியாது. இதனால் அந்த 4 யானைகள் மட்டும் தெப்பகாட்டிலேயே வைத்து பராமரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
யானை சவாரியும் ரத்துமுகாம் மூடப்படுவதால் தெப்பகாட்டில் சுற்றுலா பயணிகளுக்காக நடத்தப்பட்டு வந்த யானை சவாரியும் காலவரையின்றி ரத்து செய்யப்படுகிறது. மேலும் மாயார் ஆற்று தண்ணீரும் ஆய்வுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம். இறந்த பாரதி யானையின் உடல் இன்று (செவ்வாய்க்கிழமை) பிரேத பரிசோதனை செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.