முதுமலையில் மேலும் ஒரு வளர்ப்பு யானை சாவு வனத்துறையினர் அதிர்ச்சி


முதுமலையில் மேலும் ஒரு வளர்ப்பு யானை சாவு வனத்துறையினர் அதிர்ச்சி
x
தினத்தந்தி 27 Dec 2016 3:30 AM IST (Updated: 27 Dec 2016 1:15 AM IST)
t-max-icont-min-icon

முதுமலையில் மேலும் ஒரு வளர்ப்பு யானை நேற்று இறந்தது. இதனால் வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். வளர்ப்பு யானைகள் முகாம் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. தாயிடமிருந்து பிரிந்து தவிக்கும் குட்டி யானை, விவசாய நி

மசினகுடி

முதுமலையில் மேலும் ஒரு வளர்ப்பு யானை நேற்று இறந்தது. இதனால் வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

வளர்ப்பு யானைகள் முகாம்

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. தாயிடமிருந்து பிரிந்து தவிக்கும் குட்டி யானை, விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகள் பிடித்து வரப்பட்டு இந்த முகாமில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2013–ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்த 6 காட்டு யானைகள் பிடிக்கப்பட்டு டாப்சிலிப் முகாமிற்கு 3 யானைகளும், முதுமலைக்கு 3 யானைகளும் கொண்டு வரபட்டன. முதுமலைக்கு கொண்டு வரப்பட்ட ஒரு பெண் யானை உள்பட 3 யானைகள் கிரால்களில் அடைத்து வைக்கப்பட்டு கும்கியாக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

அவற்றுக்கு நர்மதா, பாரதி, கிருஷ்ணா என பெயரும் சூட்டப்பட்டது. பார்வையாளர்களை மிகவும் கவர்ந்து வந்த இந்த 3 யானைகளில் நர்மதா என்ற 24 வயது மதிக்கத்தக்க பெண் யானை கடந்த 1–ந்தேதி வயிற்றுப்போக்கு மற்றும் மாரடைப்பு காரணமாக இறந்தது.

மேலும் ஒரு யானை சாவு

நர்மதா யானையுடன் திருவண்ணாமலையிலிருந்து பிடித்து வரப்பட்டு பாரதி என்ற 9 வயது மதிக்கத்தக்க ஆண் யானையும் நேற்று மதியம் திடீரென்று இறந்தது.

நேற்று காலை அந்த யானைக்கு திடீரென்று வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. உடனே கால்நடை மருத்துவர் அந்த யானைக்கு தேவையான சிகிச்சை அளித்தார். இதனால் அதன் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக நேற்று மதியம் 2 மணியளவில் திடீரென உயிரிழந்தது.

நர்மதா யானை இறந்து 25 நாட்களே ஆன நிலையில் அதனுடன் முதுமலைக்கு கொண்டு வரப்பட்ட மற்றொரு யானையும் இறந்த சம்பவம் வனத்துறையினர் மற்றும் சுற்றுசூழல் ஆர்வலர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அடுத்தடுத்து 2 யானைகள் இறந்ததால் முதுமலையை சேர்ந்த வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.


Next Story