நாட்டில் பொருளாதார போர் நடக்கிறது: வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடக்கூடாது எச்.ராஜா பேட்டி
நாட்டில் பொருளாதார போர் நடக்கிறது என்றும், வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்றும் பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார். பேட்டி பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று நாகர்கோவிலில் உள்ள கட்சி அலுவலகத்தில்
நாகர்கோவில்
நாட்டில் பொருளாதார போர் நடக்கிறது என்றும், வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்றும் பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.
பேட்டிபா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று நாகர்கோவிலில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
சபரிமலை அய்யப்பன் கோவிலில் கூட்ட நெரிசலில் 25–க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். சபரிமலையில் பக்தர்களின் வசதிக்காக பாதையை அகலப்படுத்த வேண்டும், சுகாதாரம், மருத்துவ வசதி ஆகியவற்றை முனைப்புடன் செய்துதர வேண்டும் என்று மத்திய சுற்றுசூழல் துறை மந்திரி தெரிவித்திருந்தார். ஆனால் இதில் கேரள மாநில அரசு கவனம் செலுத்தவில்லை.
அய்யப்பன் கோவிலுக்கு யார் வர வேண்டும்?, யார் வரக்கூடாது என்பதை தேவஸ்தானம் தான் முடிவு செய்ய வேண்டும்.
வேலைநிறுத்தத்தில் ஈடுபடக்கூடாதுவங்கியில் பணம் பெறவும், டெபாசிட் செய்யவும் கட்டுப்பாடுகள் உள்ளன. இதுபோன்ற கட்டுப்பாடுகள் இல்லை எனில் யார் வேண்டுமானாலும் கருப்பு பணத்தை மாற்றிக்கொள்ள முடியும். இருப்பினும் சட்டத்தை மீறி சில வங்கி அதிகாரிகள் கருப்பு பணத்தை மாற்ற உதவி செய்துள்ளனர். முறைகேடுகளில் ஈடுபட்ட வங்கி அதிகாரிகளுக்கு ஜெயில் உறுதி.
நாடுகளுக்கு இடையே போர் நடக்கும்போது ராணுவ வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்படுவது இல்லை. அதுபோன்று நாட்டில் தற்போது பொருளாதார போர் நடந்துகொண்டிருக்கிறது. எனவே வங்கி ஊழியர்களுக்கு ஓய்வு என்பது இல்லை. நாட்டில் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சூழலில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருப்பது தேசபக்தியற்ற செயல். வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடக்கூடாது.
தமிழகத்தில் எம்.ஜி.ஆர். 35 சதவீத ஓட்டுக்களையும், ஜெயலலிதா 45 சதவீத ஓட்டுக்களையும் பெற்று வந்தனர். ஆனால் இந்த தலைவர்கள் தற்போது இல்லை. மேலும் இதுபோன்ற தலைவர்கள் தற்போது அ.தி.மு.க.விலும் இல்லை. எனவே அங்கு வெற்றிடம் ஏற்பட்டுதான் இருக்கிறது.
மாநில அரசிடம் அனுமதி பெறாமல் எங்கு வேண்டுமானாலும் சோதனை நடத்த வருமான வரித்துறைக்கு அதிகாரம் உண்டு.
ராமமோகனராவ் வீட்டில் நடந்த சோதனை அரசியல் ரீதியில் மேற்கொள்ளப்பட்டது என்றால், அவர் வீட்டில் இருந்து பல கோடி ரூபாய், தங்கம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்க முடியாது.
ஜல்லிக்கட்டுக்கு தடை வர காரணம் காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வினர் தான். தற்போது அவர்கள் நாடகம் ஆடுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன், நாகர்கோவில் நகரசபை முன்னாள் தலைவி மீனாதேவ் மற்றும் நிர்வாகிகள் ராஜன், அஜித்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.