சுனாமி நினைவு தினம்: கடலில் மலர் தூவி நாராயணசாமி அஞ்சலி


சுனாமி நினைவு தினம்: கடலில் மலர் தூவி நாராயணசாமி அஞ்சலி
x
தினத்தந்தி 27 Dec 2016 4:00 AM IST (Updated: 27 Dec 2016 2:23 AM IST)
t-max-icont-min-icon

சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு கடலில் மலர் தூவி முதல்–அமைச்சர் நாராயணசாமி அஞ்சலி செலுத்தினார். சுனாமி நினைவு தினம் கடந்த 2004–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26–ந் தேதி சுனாமி ஏற்பட்டது. இதில் புதுவையில் மட்டும் 100க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். ஆயிரத்தி

புதுச்சேரி

சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு கடலில் மலர் தூவி முதல்–அமைச்சர் நாராயணசாமி அஞ்சலி செலுத்தினார்.

சுனாமி நினைவு தினம்

கடந்த 2004–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26–ந் தேதி சுனாமி ஏற்பட்டது. இதில் புதுவையில் மட்டும் 100க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளையும், உடமைகளையும் இழந்தனர்.

இதனை தொடர்ந்து ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 26–ந் தேதி சுனாமி நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அன்றைய தினம் சுனாமியால் இறந்தவர்களுக்கு புதுச்சேரி கடற்கரையில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

நாராயணசாமி அஞ்சலி

புதுச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 12–வது ஆண்டு சுனாமி நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு கடற்கரை சாலையில் மகாத்மா காந்தி சிலையின் பின்புறம் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் முதல்–அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு சுனாமி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் கடலில் மலர்கள் தூவியும், பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்தினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் கந்தசாமி, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், சிவா, மீன்வளத்துறை செயலர் ராவ், இயக்குனர் வின்சென்ட்ராயர், முன்னாள் எம்.பி. ராமதாஸ், தேசிய மீனவர் பேரவை தலைவர் இளங்கோ மற்றும் மீனவ சமுதாய தலைவர்கள், கிராம பஞ்சாயத்து தலைவர்கள், மீனவ அமைப்பு நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

கோரிக்கை மனு

அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பியபோது முதல்–அமைச்சர் நாராயணசாமியிடம், மீனவர் பேரவை தலைவர் இளங்கோ கோரிக்கை மனுவை அளித்தார். அந்த மனுவில், ‘புதுச்சேரியில் சுனாமி தாக்குதலால் உயிரிழந்த மீனவர்கள் உள்ளிட்ட பொதுமக்களின் பெயர்கள் பதிக்கப்பட்ட சுனாமி நினைவுச்சின்னம் ஒன்றை புதுச்சேரி கடற்கரைச்சாலையில் பழைய நீதிமன்ற கட்டிடம் அருகில் அமைக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

வைத்திக்குப்பம்

வைத்திக்குப்பம் பகுதியில் சுனாமி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள், பெண்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

குருசுக்குப்பம் பகுதியில் உள்ள சுனாமி நினைவிடத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

வம்பாகீரப்பாளையம்

சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு வம்பாகீரப்பாளையம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சோனாம்பாளையம் சந்திப்பில் நடந்தது. நிகழ்ச்சியில் அன்பழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் வம்பாகீரப்பாளையம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அவர்கள் அங்கிருந்து கடற்கரை நோக்கி மவுன ஊர்வலமாக சென்றனர். ஊர்வலம் கடற்கரை சாலை வழியாக டூப்ளே சிலையை அடைந்தது. அங்கு அவர்கள் கடலில் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.

பெரிய காலாப்பட்டு

புதுச்சேரி மாநிலம் பெரிய காலாப்பட்டு கடற்கரையில் நேற்று காலை 8–30 மணிக்கு சுனாமி நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதில் கடற்கரையில் அமைக்கப்பட்டு சுனாமி நினைவு தூண் மீது மலர் தூவியும், பால் ஊற்றியும், நினைவு தூணின் முன்பு மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் சுனாமி பேரலையில் சிக்கி பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கடலில் பால் ஊற்றப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஷாஜகான், பெரிய காலாப்பட்டு மீனவ பஞ்சாயத்தார், சுனாமி பேரலையில் சிக்கி உறவினர்கள், குழந்தைகளை பறிகொடுத்தவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

வீராம்பட்டினம்

வீராம்பட்டினம் கடற்கரையில் சுனாமி நினைவு தின நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடற்கரையில் அமைக்கப்பட்டு உள்ள சுனாமி நினைவு சிலைக்கு மலர் தூவியும், சிலை முன்பு மலர் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் சுனாமியில் சிக்கி உயிரிழந்தவர்களின் நினைவாக மெழுகுவர்த்தியும் ஏற்றப்பட்டது.

முன்னதாக வீராம்பட்டினம் மீனவர்கள் மற்றும் கிராம மக்கள், செங்கழுநீர் அம்மன் கோவில் அறங்காவலர் குழுவினர் உள்பட 100–க்கும் மேற்பட்டவர்கள் செங்கழுநீர் அம்மன் கோவில் முன்பு இருந்து மலர்வளையம் மற்றும் ஜோதி ஏந்தி மவுன ஊர்வலமாக புறப்பட்டனர். இந்த மவுன ஊர்வலம் வீராம்பட்டினம் மாட வீதிகள் வழியாக, வீராம்பட்டினம் கடற்கரையை வந்தடைந்தது. இந்த நிகழ்ச்சியில் ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., காந்திராம் நற்பணி இயக்கத் தலைவர் பாஸ்கர், செங்கழுநீர் அம்மன்கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஆனந்தன் மற்றும் மீனவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து வீராம்பட்டினம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள், சுனாமி பேரலையில் சிக்கி பலியாகிய 2 பேரின் உடல் கரை ஒதுங்கியிருப்பதுபோல் மணல் சிற்பம் செய்து அஞ்சலி செலுத்தினார்கள்.

மீன்பிடிக்க செல்லவில்லை

சுனாமி நினைவு தினத்தையொட்டி புதுவையில் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதேபோல் கனகசெட்டிக்குளம், சின்னக்காலாப்பட்டு, பிள்ளைச்சாவடி உள்பட புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து மீனவ கிராமங்களில் நேற்று சுனாமி நினைவு தினம் கடை பிடிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.


Next Story