சுனாமி குடியிருப்பில் செல்போன் டவர் அமைக்காததை கண்டித்து கோர்ட்டு உத்தரவு நகலை பட்டம்போல் பறக்கவிட்டு போராட்டம்
சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டும், பெரிய காலாப்பட்டு சுனாமி குடியிருப்பில் செலபோன் டவர் அமைக்காததை கண்டித்து, அந்த குடியிருப்பில் வசித்து வரும் மீனவர்கள் சுனாமி நினைவு தினமான நேற்று கோர்ட்டு உத்தரவு நகலை பட்டம்போல் காற்றில் பறக்கவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டன
காலாப்பட்டு,
சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டும், பெரிய காலாப்பட்டு சுனாமி குடியிருப்பில் செலபோன் டவர் அமைக்காததை கண்டித்து, அந்த குடியிருப்பில் வசித்து வரும் மீனவர்கள் சுனாமி நினைவு தினமான நேற்று கோர்ட்டு உத்தரவு நகலை பட்டம்போல் காற்றில் பறக்கவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுனாமி குடியிருப்பில் செல்போன் சேவை பாதிப்பு
புதுச்சேரி மாநிலம் கனகசெட்டிக்குளம், பெரிய காலாப்பட்டு, சின்னக் காலாப்பட்டு மற்றும் பிள்ளைச்சாவடி ஆகிய 4 மீனவ கிராமங்களிலும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு, பெரிய காலாப்பட்டில், புதுச்சேரி மத்திய சிறை வளாகம் அருகே சுனாமி நினைவு குடியிருப்புகள் கட்டிக்கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடிக்கும்பலை சேர்ந்தவர்கள் செல்போன் மூலம் வெளியில் உள்ள தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறிப்பதாக புகார்கள் எழுந்தன. அதைத் தொடர்ந்து மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடிகள் முறைகேடாக செல்போன் பேசுவதை தடுக்க சிறை வளாகத்தில் செல்போன் செயல்இழப்பு கருவி (செல்போன் சிக்னல் ஜாமர் கருவி) பொருத்தப்பட்டது.
இந்த கருவியின் சக்தி காரணமாக சிறையையொட்டி அமைந்துள்ள சுனாமி குடியிருப்பில் உள்ள மக்கள் தங்கள் செல்போன்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அவர்கள் தாங்கள் செல்போன் பயன்படுத்த வசதியாக தங்கள் குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க வேண்டும் என்று அதிகாரிகள், அமைச்கர்களிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சென்னை ஐகோர்ட்டில் வழக்குஅதைத் தொடர்ந்து சுனாமி குடியிருப்போர் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு சுனாமி குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க உத்தரவிட்டது. ஆனால் அதன்பிறகும் அங்கு செல்போன் டவர் அமைக்கப்படவில்லை.
அதன் காரணமாக தொடர்ந்து சுனாமி குடியிருப்பில் வசிப்பவர்கள், அவசியமான தேவைகளுக்குகூட செல்போன் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
மீனவர்கள் போராட்டம்இதனை கண்டித்து நேற்று சுனாமி நினைவு தினத்தில், பெரிய காலாப்பட்டு சுனாமி குடியிருப்பில் வசித்து வரும் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சுனாமி குடியிருப்பில் செல்போன் டவர் அமைக்க வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் நகலை கயிற்றில் கட்டி பட்டம்போல் காற்றில் பறக்கவிட்டு போராட்டம் நடத்தினார்கள். சிறிது நேரம் போராட்டம் நடத்திய பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.