திருச்சியில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி–சாலை மறியல் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர், விவசாயிகள் 118 பேர் கைது


திருச்சியில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி–சாலை மறியல் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர்,  விவசாயிகள் 118 பேர் கைது
x
தினத்தந்தி 27 Dec 2016 5:15 AM IST (Updated: 27 Dec 2016 3:28 AM IST)
t-max-icont-min-icon

வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரி திருச்சியில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்று சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் விவசாயிகள் 118 பேரை போலீசார் கைது செய்தனர். காய்ந்த பயிர்கள் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும், கா

திருச்சி,

வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரி திருச்சியில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்று சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் விவசாயிகள் 118 பேரை போலீசார் கைது செய்தனர்.

காய்ந்த பயிர்கள்

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலகம் முன்பு தொடர் முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி திருச்சியில் முற்றுகை போராட்டம் நடத்துவதற்காக இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் பெரியமிளகுபாறையில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு திரண்டனர். கையில் காய்ந்த வாழைகள் மற்றும் பயிர்களை ஏந்தியபடியும், சிலர் நெற்றி மற்றும் உடலில் பட்டை நாமம் வரைந்தும் இருந்தனர். சிறிது நேரம் கோரிக்கை குறித்து பேசினர். அதன்பின் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக விவசாய சங்க மாநில துணை செயலாளர் இந்திரஜித் தலைமையில் அனைவரும் ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர்.

சாலை மறியல்

போராட்டக்காரர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு செல்லவிடாமல் தடுப்பதற்காக நுழைவு வாயில் அருகே ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர். மேலும் சாலையின் குறுக்கே இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டன. ஊர்வலமாக வந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் விவசாயிகளை கண்டோன்மெண்ட் சரக போலீஸ் உதவி கமிஷனர் மந்திரமூர்த்தி, இன்ஸ்பெக்டர் பால்ராஜ் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அப்போது போராட்டக்காரர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டு கோரிக்கை தொடர்பாக கோஷமிட்டனர். அதன்பின் தடுப்புகளை தாண்டி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.

118 பேர் கைது

இதையடுத்து அனைவரையும் போலீசார் கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றினர். இதில் 25 பெண்கள் உள்பட மொத்தம் 118 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் அனைவரும் கருமண்டபத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து இன்றும் (செவ்வாய்க்கிழமை) போராட்டம் நடைபெறுமா? என நிர்வாகிகளிடம் கேட்ட போது திருச்சியில் இல்லாமல் மற்ற மாவட்டங்களில் நடைபெறும் என தெரிவித்தனர்.


Next Story