காகித ஆலை ஒப்பந்த தொழிலாளர் திடீர் மரணம் இழப்பீடு வழங்க கோரி உறவினர்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


காகித ஆலை ஒப்பந்த தொழிலாளர் திடீர் மரணம் இழப்பீடு வழங்க கோரி உறவினர்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 27 Dec 2016 3:57 AM IST (Updated: 27 Dec 2016 3:57 AM IST)
t-max-icont-min-icon

காகித ஆலை ஒப்பந்த தொழிலாளர் திடீரென மரணம் அடைந்ததை தொடர்ந்து இழப்பீடு வழங்க கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஒப்பந்த தொழிலாளர் கரூரை அடுத்த வாங்கல் சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் வேல்முருகன் என்கிற கோபி (வ

கரூர்,

காகித ஆலை ஒப்பந்த தொழிலாளர் திடீரென மரணம் அடைந்ததை தொடர்ந்து இழப்பீடு வழங்க கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஒப்பந்த தொழிலாளர்

கரூரை அடுத்த வாங்கல் சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் வேல்முருகன் என்கிற கோபி (வயது40). இவர் காகித ஆலையில் ஒப்பந்த தொழிலாளராக பொக்ளின் எந்திரம் இயக்கும் வேலை செய்து வந்தார். நேற்று காலை 6 மணிக்கு வழக்கம் போல் பணிக்கு சென்றார். அப்போது காலை 8 மணி அளவில் அவருக்கு திடீரென்று நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து காகித ஆலையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார். அவரை பரிசோதித்த டாக்டர் அவருக்கு மாத்திரை வழங்கியுள்ளார். அதை சாப்பிட்டுள்ளார். இருப்பினும் அதிக வலி ஏற்பட்டதால் அவரை கரூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சாலை மறியல்

இதைத்தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மதியம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை காகித ஆலை நிர்வாகத்தினர் இது குறித்து எதுவும் விசாரிக்கவில்லை. பேச்சுவார்த்தை நடத்தவும் வில்லை. எனவே இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். வாரிசு வேலை வழங்க வேண்டும் என்று கூறி அவரது உறவினர்கள் மாலை 4 மணி அளவில் கரூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு கரூர்– புகளூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

அப்போது இறந்துபோன கோபியின் தாய் மாரியம்மாள், மனைவி காந்திமதி கதறி அழுதனர். மேலும் தாய் சாலையில் படுத்து உருண்டு கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு காகித ஆலை நிர்வாகத்தினர் வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் கரூர்– புகளூர் சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்படைந்தது. மரணம் அடைந்தவருக்கு மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Next Story