தாமிரபரணி ஆற்றில் புன்னக்காயலில் தடுப்பணை கட்ட வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை


தாமிரபரணி ஆற்றில் புன்னக்காயலில் தடுப்பணை கட்ட வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 27 Dec 2016 5:02 AM IST (Updated: 27 Dec 2016 5:02 AM IST)
t-max-icont-min-icon

தாமிரபரணி ஆற்றில் ஏற்கனவே திட்டமிட்டவாறு புன்னக்காயலில் தடுப்பணை கட்ட வேண்டும் என மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும்

தூத்துக்குடி

தாமிரபரணி ஆற்றில் ஏற்கனவே திட்டமிட்டவாறு புன்னக்காயலில் தடுப்பணை கட்ட வேண்டும் என மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) ராசையா தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டன.

கோவில்பட்டி தாலுகாவில் தொடர...

கோவில்பட்டி தாலுகா அச்சன்குளம் பஞ்சாயத்து மற்றும் அதை சுற்றியுள்ள பஞ்சாயத்துகளை சேர்ந்த பொதுமக்கள் கூட்டாக வந்து மனுக்கள் கொடுத்தனர். அந்த மனுவில், ‘நாங்கள் கோவில்பட்டி தாலுகாவில் வசித்து வருகிறோம். எங்கள் ஊருக்கும் கோவில்பட்டி தாலுகா அலுவலகத்துக்கும் சுமார் 17 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. நாள் ஒன்றுக்கு 43 முறை இருவழி பஸ் வசதி உள்ளது. இந்த நிலையில் புதிதாக உருவாக உள்ள கயத்தாறு தாலுகாவில் அச்சன்குளம், காமநாயக்கன்பட்டி, குருவி நத்தம் உள்ளிட்ட பஞ்சாயத்துகள் இணைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

அவ்வாறு இணைக்கப்பட்டால், கயத்தாறு தாலுகா அலுவலகத்துக்கு சுமார் 45 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டி இருக்கும். அதுவும் இல்லாமல் பஸ் வசதியும் கிடையாது. அரசின் சலுகைகளை பெற பொதுமக்கள் சிரமப்படுவார்கள். தாலுகா அலுவலகம் தொடர்பான பணிகளை செய்ய, பொதுமக்கள் பல கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டி இருக்கும். எனவே பொதுமக்கள் நலன் கருதி, எங்கள் ஊராட்சிகள் கோவில்பட்டி தாலுகாவிலேயே இணைந்து இருக்க உதவ வேண்டும், என்று கூறி உள்ளனர்.

கல்குவாரியை மூட வேண்டும்

கோவில்பட்டி வண்டானம் புதுப்பட்டி ஊர் மக்கள் கொடுத்த மனுவில், ‘எங்கள் பகுதியில் 150 குடும்பங்கள் உள்ளன. எங்கள் ஊர் பக்கத்தில் தனியார் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. அங்கு வெடிகள் வைத்து பாறைகள் உடைக்கப்படுகிறது. இதனால் எங்கள் பகுதிகளில் உள்ள வீடுகள் எல்லாம் அதிர்கின்றன. மேலும் அந்த வழியாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் விபத்தில் சிக்கி கொள்ள வாய்ப்புகள் உள்ளது. எனவே பள்ளி செல்லும் குழந்தைகள் நலன்கருதி அந்த கல்குவாரியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறி உள்ளனர்.

குடிநீர் கட்டணம்

தூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ரமேஷ் கொடுத்த மனுவில், ‘தூத்துக்குடி மாநகராட்சிக்கு 14 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. எனவே மாநகராட்சி பகுதிகளில் சீரான குடிநீர் வழங்கப்படும் வரை குடிநீர் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை தீரும் வரை தாமிரபரணியில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்குவதை நிறுத்த வேண்டும், என்று கூறி இருந்தார்.

பஸ் சேவை

தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி நதிநீர் பாதுகாப்பு பேரவை அமைப்பாளர் நயினார் குலசேகரன் கொடுத்த மனுவில், ‘தூத்துக்குடியில் இருந்து இரவு 10.10 மணிக்கு புறப்பட்டு சாயர்புரம், நட்டாத்தி, பண்டாரவிளை, பெருங்குளம், ஏரல் வழியாக குரும்பூர் செல்லும் தனியார் பஸ் கடந்த 10 நாட்களாக இயங்கவில்லை. இதனால் இரவு நேரங்களில் வெளியூர்களிலிருந்து ஊருக்கு திரும்புவதற்கு பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். அந்த தனியார் பஸ் மீண்டும் அதே வழிதடத்தில் இயங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறி உள்ளார்.

புன்னக்காயலில் தடுப்பணை

தூத்துக்குடி புன்னக்காயல் பொதுமக்கள் கொடுத்த மனுவில், ‘தாமிரபரணி ஆற்றின் குறுக்கே புன்னக்காயலில் தடுப்பணை கட்ட மாவட்ட நிர்வாகம் முதலில் முடிவு செய்தது. தற்போது அந்த தடுப்பணையை புன்னக்காயலில் இருந்து 7 கிலோ மீட்டர் முன்னால் உள்ள முக்காணியில் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக தெரிகிறது. அவ்வாறு முக்காணியில் தடுப்பணை அமைக்கப்பட்டால் புன்னக்காயல் பகுதியில் கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் உப்பாவதோடு விவசாயம் பாதிக்கப்படும். எனவே மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே ஆய்வு செய்து உறுதி செய்யப்பட்ட இடமான புன்னக்காயல் பகுதியில் தடுப்பணை கட்ட மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறி உள்ளனர்.




Next Story