தற்காலிக கணினி இயக்குபவர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி 30–ந் தேதி தலைமைச் செயலாளரிடம் மனு அளிக்க முடிவு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பேட்டி


தற்காலிக கணினி இயக்குபவர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி 30–ந் தேதி தலைமைச் செயலாளரிடம் மனு அளிக்க முடிவு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பேட்டி
x
தினத்தந்தி 28 Dec 2016 4:30 AM IST (Updated: 27 Dec 2016 10:30 PM IST)
t-max-icont-min-icon

தற்காலிக கணினி இயக்குபவர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி வருகிற 30–ந் தேதி தலைமைச் செயலாளரிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம் என்று அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். ஆலோசனை கூட்டம் தமிழக வருவாய்த்துறையில் விலையில்லா மின்வி

தஞ்சாவூர்,

தற்காலிக கணினி இயக்குபவர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி வருகிற 30–ந் தேதி தலைமைச் செயலாளரிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம் என்று அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டம்

தமிழக வருவாய்த்துறையில் விலையில்லா மின்விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர் வழங்கும் திட்டத்தின் கீழ் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் தாசில்தார் அலுவலகங்களில் தற்காலிக கணினி இயக்குபவர்களாக பணி புரிந்து வந்த 204 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் சார்பில் தஞ்சை பெசன்ட் அரங்கில் நேற்று நடந்தது.

கூட்டத்திற்கு மாநில துணைத் தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில தலைவர் சிவக்குமார், சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் கணினி இயக்குபவர்கள் நல ஒருங்கிணைப்பாளர்கள் மணி, ஜெயக்குமார், அன்புகண்ணன், துளசிதாஸ், சரவணி, சுதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பேட்டி

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

வருவாய்த்துறையில் விலையில்லா மின்விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர் வழங்கும் திட்டத்தின் கீழ் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் தாசில்தார் அலுவலகங்களில் தொகுப்பூதியத்தின் அடிப்படையில் 204 பேர் தற்காலிக கணினி இயக்குபவர்களாக நியமனம் செய்யப்பட்டனர். தற்போது இந்த திட்டம் முடிந்துவிட்டதாக கூறி 204 பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதை வன்மையாக கண்டிக்கிறோம். இவர்கள் அனைவரும் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு, பணி மூப்பு, கல்வித்தகுதி, இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டவர்கள்.

ஏற்கனவே தமிழகம் முழுவதும் அனைத்து அரசுத்துறைகளிலும் 3 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளன. இவற்றிற்கு புதிதாக ஆட்களை தேர்வு செய்தால் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். கணினி இயக்குபவர்களாக இவர்கள் அனைவரும் 10 ஆண்டுகள் பணி புரிந்துள்ளனர். இவர்களது பணி நீட்டிப்பு ஆணை கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த நிலையில் தங்களுக்கு வருவாய்த்துறையில் காலியாக உள்ள தட்டச்சர், இளநிலை உதவியாளர் அல்லது சமூக பாதுகாப்பு திட்டத்தில் கணினி இயக்குபவர்காளக பணிமாறுதல் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று வருவாய்த்துறை அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். ஆனால் இவற்றை எல்லாம் பரிசீலனை செய்யாமல் 204 பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தலைமைச் செயலாளரிடம் மனு

இவர்கள் பணி நியமனம் செய்யப்பட்ட பின்னர் மற்ற துறைகளில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக கணினி இயக்குபவர்களாக கல்வித்துறை, மருத்துவத்துறை, நகராட்சித்துறை, தொழிலாளர் நலவாரியத்தில் பணியில் சேர்ந்தவர்களுக்கு தற்போது காலமுறை ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே பணி நீக்கம் செய்யப்பட்ட தற்காலிக கணினி இயக்குபவர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய முதல்–அமைச்சர் முன்வர வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 30–ந் தேதி சென்னையில் தலைமைச் செயலாளரை நேரில் சந்தித்து மனு அளிக்க முடிவு செய்துள்ளோம். இந்த கோரிக்கை தொடர்பாக முதல்–அமைச்சர் தலையிட்டு நியாயம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story