பணத்தட்டுப்பாடு எதிரொலி கோத்தகிரியில் ஏ.டி.எம்.கள் மூடிகிடப்பதாக பொதுமக்கள் அவதி
பணத்தட்டுப்பாடு எதிரொலியால் காளான் விலை கடும் வீழ்ச்சியடைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். கோத்தகிரியில் ஏ.டி.எம்.கள் மூடிகிடப்பதாக பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். ரூபாய் நோட்டுகள் செல்லாது அறிவிப்பு 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்கள
கோத்தகிரி
பணத்தட்டுப்பாடு எதிரொலியால் காளான் விலை கடும் வீழ்ச்சியடைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். கோத்தகிரியில் ஏ.டி.எம்.கள் மூடிகிடப்பதாக பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள்.
ரூபாய் நோட்டுகள் செல்லாது அறிவிப்பு500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என கடந்த மாதம் 8–ந் தேதி அறிவிக்கப்பட்ட பின் பணத்தட்டுப்பாடு அதிகரித்து உள்ளது. பழைய நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய வருகிற 30–ந் தேதியுடன் காலக்கெடு முடிகிறது. பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பு வெளியானதில் இருந்து ஏ.டி.எம்.களில் சரியாக பணம் கிடைப்பது இல்லை.
வங்கிகளிலும் குறிப்பிட்ட தொகை மட்டுமே வழங்கப்படுகிறது. வங்கிகளில் பெரும்பாலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வழங்கப்படுவதால் சில்லறைக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. பணப்புழக்கம் குறைந்துள்ளதால் தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது.
ஏ.டி.எம்.களிலும் போதிய அளவு பணம் வராத காரணத்தினால் பொதுமக்கள் தங்களது செலவினங்களை குறைத்து வருகின்றனர். இதனிடையே பணத்தட்டுப்பாடு காரணமாக நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் காளான்களுக்கு கடும் விலைவீழ்ச்சி ஏற்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். இதுகுறித்து காளான் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கூறியதாவது:–
பசுமைகுடில்கள்நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விலை வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளதால் பசுமை குடில்கள் அமைத்து கொய்மலர்கள் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்காக மாநில அரசு மானியம் வழங்கி வருகிறது. தற்போது கொய்மலர்களுடன், காளான்களும் நீலகிரியில் அதிகளவு உற்பத்தி செய்யப்படுகிறது. காளான் உற்பத்திக்கு ஏற்ற காலநிலை நீலகிரியில் நிலவுகிறது. இதனால் விவசாயிகள் இதனை குடிசை தொழில்போல் மேற்கொண்டு வருகின்றனர்.
கிலோ ரூ.60–க்கு விற்பனைஇங்கு உற்பத்தி செய்யப்படும் காளான்கள் சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட இடங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆரம்பத்தில் ஒரு கிலோ காளான் ரூ.140 முதல் ரூ.160 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் எங்களுக்கு நல்ல லாபம் கிடைத்து வந்தது. ஆனால் தற்போது கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை மட்டுமே விற்பனையாகிறது. பணத்தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் காளன்களை வாங்குவதை குறைத்து விட்டனர்.
மேலும் நாங்கள் தற்போது விற்பனை செய்த காளான்களுக்கும் ரொக்கமாக பணத்தை பெற முடியவில்லை. இதனால் இதில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. புத்தாண்டிற்கு பிறகாவது பணத்தட்டுப்பாடு நீங்கும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மூடி கிடக்கும் ஏ.டி.எம்.கள்.கோத்தகிரி மற்றும் அதனை சுற்றி உள்ள சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது. பள்ளிகளுக்கு ஆண்டு இறுதிக்கான கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் பெற்றோர்கள் தவிக்கிறார்கள். இந்த நிலையில் கோத்தகிரி பகுதியில் செயல்பட்டு வந்த 10–க்கும் மேற்பட்ட ஏ.டி.எம் மையங்கள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மூடப்படு உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகிறார்கள்.
மேலும் பணம் செலுத்தும் எந்திரமும் வேலை செய்யாத நிலையில் உள்ளது. இதனால் பணம் எடுக்கவும், பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தவும் வங்கிகளுக்கு செல்லும் நிலை உள்ளது. இதனால் வெகுநேரம் பொதுமக்கள் வங்கிகளில் காத்து இருக்க வேண்டிய நிலையில் உள்ளது.
கணினியில் மாற்றங்கள்இதுகுறித்து வங்கி அதிகாரி ஒருவர் கூறும்போது, ஏ.டி.எம் மையங்கள் தனியார் அமைப்புகள் மூலம் இயங்குகிறது. அவர்கள் போதிய பணம் எயந்திரங்களில் நிரப்பாததால் ஏ.டி.எம் மையங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் பணம் செலுத்தும் எயந்திரங்களில் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் இனிமேல் அனுமதிக்காத வகையில் கணினியில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது, என்றார்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், பணத்தை வங்கிகளில் எடுக்க விதித்துள்ள கட்டுப்பாடுகளை சற்று தளர்த்தினால் மட்டுமே பணப்புழக்கம் சீராகி வியாபாரம் பழைய நிலைக்கு வரும் என்று தெரிவித்தனர்.