தாராபுரம் பகுதியில் ஓட்டல்,பேக்கரிகளில் சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் உணவு பாதுகாப்பு அதிகாரி வலியுறுத்தல்


தாராபுரம் பகுதியில் ஓட்டல்,பேக்கரிகளில் சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் உணவு பாதுகாப்பு அதிகாரி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 28 Dec 2016 3:30 AM IST (Updated: 28 Dec 2016 1:21 AM IST)
t-max-icont-min-icon

தாராபுரம் பகுதியில் ஓட்டல், பேக்கரிகளில் சுகாதாரமான குடிநீர் வழங்கவேண்டும் என்று விழிப்புணர்வு கூட்டத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரி வலியுறுத்தினார். விழிப்புணர்வு கூட்டம் தாராபுரத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை சார்பில் ஓட்டல்கள், பேக

தாராபுரம்,

தாராபுரம் பகுதியில் ஓட்டல், பேக்கரிகளில் சுகாதாரமான குடிநீர் வழங்கவேண்டும் என்று விழிப்புணர்வு கூட்டத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரி வலியுறுத்தினார்.

விழிப்புணர்வு கூட்டம்

தாராபுரத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை சார்பில் ஓட்டல்கள், பேக்கரி, டீ மற்றும் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறையின் மாவட்ட நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். அலுவலர்கள் சையது அபுதாகீர், சுப்பிரமணியம் மற்றும் ஓட்டல், பேக்கரி சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் மாவட்ட நியமன அலுவலர் தமிழ்செல்வன் பேசியதாவது:–

உணவு தயாரிக்கும் இடத்தில் பூச்சிகள் மற்றும் எலிகள் உள்ளே புகாதவாறு தடுப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும். பூச்சிமருந்தோ அல்லது எலி மருந்தோ பயன்படுத்தக்கூடாது. உணவகத்தில் பயன்படுத்தப்படும் உணவு பொருட்கள் நல்ல தரமானதாகவும், பாதுகாப்பு மற்றும் தரச்சான்று பெற்றதாகவும் இருக்க வேண்டும். பணியாளர்களுக்கு தொற்று நோய் இருக்க கூடாது. அனைத்து பணியாளர்களையும் மாதத்திற்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்து அதற்கான சான்று வைத்திருக்க வேண்டும். பணியாளர்கள் மேலங்கி, கையுறை, முடியுறை ஆகியவற்றை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.

சுகாதாரமான குடிநீர்

ஓட்டல்கள் மற்றும் பேக்கரி, டீ கடைகளில் பாதுகாக்கப்பட்ட சுகாதாரமான குடிநீர் மட்டுமே வழங்க வேண்டும். உணவகத்தில் பயன்படுத்தப்படும் சைவ மற்றும் அசைவ உணவுப்பொருட்களில் தொற்று ஏற்படாத வண்ணம் தனித்தனியாக அதற்குரிய வெப்ப நிலையில் பராமரிக்க வேண்டும்.

நிறுவனங்களில் உள்ள தண்ணீர் தொட்டி, மேல்நிலைத்தொட்டி மற்றும் தண்ணீர் சேகரித்து வைக்கும் பெரிய பாத்திரங்களை நன்றாக மூடி வைக்க வேண்டும். மேலும் வாரத்திற்கு ஒருமுறை பிளிச்சிங் பவுடர் கொண்டு கழுவவேண்டும்.

கடும் நடவடிக்கை

விற்பனைக்கு உள்ள எந்த உணவுப்பொருட்களாக இருந்தாலும், மையால் அச்சிடப்பட்ட பேப்பர்களில் எக்காரணத்தைக்கொண்டும் பொட்டலமாக கட்டுவதோ, பரிமாறுவதோ கூடாது. எந்த உணவுப்பொருட்களாக இருந்தாலும் அதை ஈக்கள் மொய்க்காதவாறு. தூசுகள் படியாதவாறு மூடிய நிலையில் வைத்திருக்க வேண்டும்.

உணவுப்பொருட்கள் பொரிப்பதற்காக பயன்படுத்திய எண்ணெயை, வடிகட்டி மீண்டும் திரும்ப பயன்படுத்தக்கூடாது. விதிகளை மீறும் நிறுவனங்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து தர நிர்ணயச்சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story