மின்சாரம் தாக்கி உயிரிழந்த தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
மடத்துக்குளம் அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினார்கள். கூலித்தொழிலாளி மடத்துக்குளத்தை அடுத்த ருத்ராபாளையத்தை சேர்ந்த இப்ராகிம் என்பவரது மகன் சிராஜூதீன் (வயது 34). விவசாய கூலித்தொழிலாளி. இவரு
மடத்துக்குளம்,
மடத்துக்குளம் அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
கூலித்தொழிலாளிமடத்துக்குளத்தை அடுத்த ருத்ராபாளையத்தை சேர்ந்த இப்ராகிம் என்பவரது மகன் சிராஜூதீன் (வயது 34). விவசாய கூலித்தொழிலாளி. இவருக்கு சசிமா யாஸ்மின் என்ற மனைவியும், தமிமும் அன்சாரி (5) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் காலை புல் அறுப்பதற்காக சென்ற சிராஜூதீன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவருடைய மனைவி அவர் செல்போனுக்கு தொடர்பு கொள்ள முயற்சித்தார்.
நீண்ட நேரமாக மணி அடித்தும் அவர் செல்போனை எடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த சசிமா யாஸ்மின் பக்கத்து வீட்டை சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் உதவியுடன் அவரை தேடிசென்றார். அப்போது ஊருக்கு சற்று தொலையில் உள்ள குப்புசாமி என்பவரது கரும்பு தோட்டத்தின் வரப்புக்கு அருகில் சிராஜூதீன் விழுந்து கிடந்தார். அருகில் சென்று பார்த்த போது உடலில் மின்சாரம் பாய்ந்து, உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
உறவினர்கள் போராட்டம்இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக அவரை மீட்டு, அருகில் இருந்த மாட்டு வண்டியில் ஏற்றி உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். கரும்பு தோட்டத்தை பன்றிகள் சேதப்படுத்துவதை தடுக்க அதன் உரிமையாளர் தோட்டத்தை சுற்றி குச்சிகளை நட்டு முறைகேடாக மின்சாரத்தை கொக்கிகள் மூலம் அதில் பாய்ச்சியுள்ளதாக கூறப்படுகிறது.
இது தெரியாமல் கால் வைத்த சிராஜூதீன் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஈஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் குமரலிங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்றுகாலை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த சிராஜூதீன் உறவினர்கள் சிராஜூதீன் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினார்கள். சிராஜூதீன் மனைவி சசிமா யாஸ்மின் உடனிருக்கும் நிலையில் ஈஸ்வரனின் புகாரை போலீசார் பதிவு செய்தது ஏன்? என்று அவர்கள கேள்வி எழுப்பினார்கள்.
எம்.எல்.ஏ.ஜெயராமகிருஷ்ணன்இதையடுத்து உடுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ், குமரலிங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சரவணன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சசிமா யாஸ்மினின் புகாரை பதிவு செய்தால் மட்டுமே போராட்டத்தை வாபஸ் வாங்குவோம் என்று உறவினர்கள் தெரிவித்ததால் போராட்டம் நீடித்தது.
இதைத்தொடர்ந்து மடத்துக்குளம் எம்.எல்.ஏ.ஜெயராமகிருஷ்ணன், தாராபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெரீனா பேகம், மடத்துக்குளம் தாசில்தார் முத்துராமன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. அதன்பின்னர் சிராஜூதீன் உடலை அவருடைய உறவினர்கள் வாங்கி சென்றனர்.