மொபட் மீது தனியார் கல்லூரி பஸ் மோதல் ஓய்வுபெற்ற ஆசிரியை சாவு; கணவர் காயம்


மொபட் மீது தனியார் கல்லூரி பஸ் மோதல் ஓய்வுபெற்ற ஆசிரியை சாவு; கணவர் காயம்
x
தினத்தந்தி 28 Dec 2016 3:30 AM IST (Updated: 28 Dec 2016 2:00 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் மொபட் மீது தனியார் கல்லூரி பஸ் மோதியதில், ஓய்வுபெற்ற ஆசிரியை இறந்தார். அவருடைய கணவர் காயம் அடைந்தார். ஓய்வு பெற்ற ஆசிரியை பிறந்த நாள் கொண்டாடிய மறுநாள் இந்த சோகம் நடந்தது. இந்த விபத்து பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:– மொபட்டில் சென்ற

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் மொபட் மீது தனியார் கல்லூரி பஸ் மோதியதில், ஓய்வுபெற்ற ஆசிரியை இறந்தார். அவருடைய கணவர் காயம் அடைந்தார். ஓய்வு பெற்ற ஆசிரியை பிறந்த நாள் கொண்டாடிய மறுநாள் இந்த சோகம் நடந்தது.

இந்த விபத்து பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–

மொபட்டில் சென்ற தம்பதி

நாகர்கோவில் சுங்கான்கடை பகுதியில் உள்ள தமிழ்தெருவைச் சேர்ந்தவர் நீலகண்டபிள்ளை. ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர். இவருடைய மனைவி சரோஜினி அம்மாள் (வயது 74). ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் கணவன்–மனைவி இருவரும் நேற்று காலை நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு செல்வதற்காக மொபட்டில் புறப்பட்டனர். மொபட்டை நீலகண்டபிள்ளை ஓட்டினார். சரோஜினி அம்மாள் பின்னால் உட்கார்ந்திருந்தார். இவர்கள் பெரியவிளை சந்திப்பு அருகே வந்தபோது பின்னாள் வந்த ஒரு தனியார் கல்லூரி பஸ், மொபட் மீது மோதியது.

மனைவி சாவு

இதில் நீலகண்டபிள்ளையும், சரோஜினி அம்மாளும் மொபட்டுடன் ரோட்டில் விழுந்தனர். அப்போது சரோஜினி அம்மாளின் தலையில் தனியார் கல்லூரி பஸ்சின் முன்பக்க சக்கரம் ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். நீலகண்டபிள்ளை காயம் அடைந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் சசிதரன் மற்றும் போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீசார் அங்கு விரைந்து சென்று பிணமாக கிடந்த சரோஜினி அம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

காயம் அடைந்த நீலகண்டபிள்ளை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

போக்குவரத்து பாதிப்பு

விபத்தில் பலியான சரோஜினி அம்மாள் நேற்று முன்தினம் பிறந்த நாள் கொண்டாடினார். பிறந்த நாளையொட்டி அவர் கோவிலுக்கு செல்ல நினைத்தார். ஆனால் முடியவில்லை. அதனால் நேற்று காலை கணவருடன் கோவிலுக்கு சென்ற போது இந்த சோகம் நடந்தது.

இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பார்வதிபுரம் சந்திப்பில் வாகனங்கள் அங்குமிங்கும் நகர முடியாமல் அணிவகுத்து நின்றன. போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து சீரானது.

இந்த விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story