வங்கியில் பண பரிமாற்றத்துக்கு கட்டுப்பாடு நீடிப்பதால் கரும்புகளை கொள்முதல் செய்வதில் வியாபாரிகளுக்கு சிக்கல் திருக்காட்டுப்பள்ளி பகுதி விவசாயிகள் கவலை
வங்கியில் பண பரிமாற்றத்துக்கு கட்டுப்பாடு நீடிப்பதால் கரும்புகளை கொள்முதல் செய்வதில் வியாபாரிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் திருக்காட்டுப்பள்ளி பகுதியை சேர்ந்த விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். பொங்கல் பண்டிகை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்
திருக்காட்டுப்பள்ளி,
வங்கியில் பண பரிமாற்றத்துக்கு கட்டுப்பாடு நீடிப்பதால் கரும்புகளை கொள்முதல் செய்வதில் வியாபாரிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் திருக்காட்டுப்பள்ளி பகுதியை சேர்ந்த விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
பொங்கல் பண்டிகைதமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. பொங்கல் பண்டிகை என்றாலே கரும்பு, மஞ்சள், இஞ்சி ஆகியவற்றுக்கு கடும் கிராக்கி ஏற்படும். இதில் கரும்புக்கு பெயர் பெற்ற பகுதியாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளி திகழ்கிறது. திருக்காட்டுப்பள்ளியில் அறுவடையாகும் கரும்புகளை கொள்முதல் செய்ய தமிழகம் முழுவதிலும் இருந்து வியாபாரிகள் ஆர்வம் காட்டுவார்கள். இங்கு கடைப்பிடிக்கப்படும் பாரம்பரிய விவசாய முறை மற்ற பகுதிகளை காட்டிலும் சுவையான கரும்புகளை உற்பத்தி செய்ய உதவுகின்றன.
ஆற்றில் தண்ணீர் வராததால் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் கரும்பு விவசாயிகள் இந்த ஆண்டு கடும் சவாலை எதிர்கொண்டனர். தற்போது திருக்காட்டுப்பள்ளி பகுதியில் கரும்பு அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. விவசாயிகள் தங்கள் வயல்களில் விளைந்த கரும்பின் தோகையை உரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
கொள்முதல் செய்வதில் சிக்கல்வியாபாரிகள் அதிகளவில் வரும் பட்சத்தில் திருக்காட்டுப்பள்ளியில் கரும்பு விற்பனை சூடுபிடிக்க தொடங்கி விடும். ஆனால் வங்கியில் பணம் எடுப்பதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு நீடிப்பதால் வியாபாரிகள் கரும்பை கொள்முதல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டை போல இந்த ஆண்டு வியாபாரிகள் ரொக்கமாக பணத்தை விவசாயிகளிடம் கொடுத்து கரும்பை கொள்முதல் செய்வது கடினம் என கூறப்படுகிறது. இதனால் கரும்பு விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி பகுதியை சேர்ந்த கரும்பு விவசாயிகள் கூறியதாவது:–
கடந்த ஆண்டு இதே நேரத்தில் வியாபாரிகள் திருக்காட்டுப்பள்ளியில் முகாமிட்டு கரும்பு கொள்முதலை தொடங்கி விட்டனர். இந்த ஆண்டு இதுவரை கரும்பு விற்பனை சூடுபிடிக்கவில்லை. 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்து விட்டது. வங்கிகளில் இருந்து பணத்தை எடுப்பதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு தற்போது வரை நீடிக்கிறது. இந்த நிலையில் வியாபாரிகள் எவ்வாறு ரொக்கமாக பணத்தை கொடுத்து கரும்பை கொள்முதல் செய்வார்கள்?
அறுவடை பாதிப்புஒரு ஏக்கரில் விளைவிக்கப்படும் கரும்பு மொத்தமாக ரூ.2 லட்சம் முதல் ரூ.2½ லட்சம் வரை விலை போகும். இவ்வளவு தொகையை வியாபாரிகளால் கொண்டு வர இயலுமா? என்ற சந்தேகம் திருக்காட்டுப்பள்ளி பகுதி விவசாயிகள் மத்தியில் உள்ளது. இந்த நிலையில் நேற்று இப்பகுதியில் பரவலாக பெய்த மழை, கரும்பு அறுவடை பணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கரும்பு வெட்டுவதற்கான கூலி அதிகமாகும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.