தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் 402 பேர் கைது


தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் 402 பேர் கைது
x
தினத்தந்தி 29 Dec 2016 4:45 AM IST (Updated: 29 Dec 2016 2:28 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதில் 402 பேரை போலீசார் கைது செய்தனர். விவசாயிகள் போராட்டம் தமிழகத்தில் பருவமழை இல்லாததால் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. மேலும் அணை, குள

திண்டுக்கல்,

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதில் 402 பேரை போலீசார் கைது செய்தனர்.

விவசாயிகள் போராட்டம்

தமிழகத்தில் பருவமழை இல்லாததால் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. மேலும் அணை, குளங்கள் வறண்டு வருவதால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் இன்றி கருகிப்போன பயிர்களை பார்த்து சில விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். இதனால் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்.

உயிரிழந்த விவசாயிகளுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானாவில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர்.

போலீசாரை தள்ளிக்கொண்டு...

அப்போது தொடர்ந்து சாரல் மழை பெய்துகொண்டிருந்தது. இருப்பினும் மழையில் நனைந்து கொண்டே ஏராளமான விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தை நோக்கி சென்றனர். இதனால் அங்கு திண்டுக்கல் புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு கோபால் தலைமையில் சுமார் 100 போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். பின்னர் விவசாயிகளை கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்லவிடாமல், நுழைவு வாயிலிலேயே போலீசார் தடுத்தனர். இருப்பினும் போலீசாரை தள்ளிக்கொண்டு விவசாயிகள் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் சென்றனர்.

பின்னர் மழையில் நனைந்தபடியே அங்கு அமர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அப்போது அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வசந்தாமணி கூறும்போது, தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியால் பயிர்கள் கருகிவிட்டன. மேலும் கால்நடைகளுக்கும் போதிய தீவனம் இல்லை. இதனால் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து, விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

402 பேர் கைது

100 நாள் வேலைத்திட்டத்தை 200 நாட்களாக உயர்த்தி, தொழிலாளர்களுக்கு ரூ.400 சம்பளம் வழங்க வேண்டும். விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் செல்வராஜ், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் வசந்தாமணி, செயலாளர் குணசேகரன் உள்பட 402 பேரை கைது செய்து போலீசார் வேனில் ஏற்றினர். பின்னர் அஞ்சலி ரவுண்டானா அருகே உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.


Next Story