தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக்கோரி தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் மதிய உணவு சமைத்து சாப்பிட்டனர்


தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக்கோரி தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் மதிய உணவு சமைத்து சாப்பிட்டனர்
x
தினத்தந்தி 29 Dec 2016 4:15 AM IST (Updated: 29 Dec 2016 2:33 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக்கோரி தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கேயே சமையல் செய்து அவர்கள் சாப்பிட்டனர். விவசாயிகள் போராட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள

தேனி,

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக்கோரி தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கேயே சமையல் செய்து அவர்கள் சாப்பிட்டனர்.

விவசாயிகள் போராட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நேற்று காலை 11 மணியளவில் தொடங்கியது.

தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து நிவாரணம் வழங்கும் பணிகளை தொடங்க வேண்டும். தற்கொலை மற்றும் கவலையால் மரணம் அடைந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். கருகி போன பயிர்களுக்கு பாதிப்புக்கு ஏற்ப இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். தரிசாக போடப்பட்ட நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். வேலையின்றி வாடும் விவசாய தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். ஏரி, குளம், கால்வாய்களை தூர்வார சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

சமைத்து சாப்பிட்டனர்

போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் ராஜப்பன், மாவட்ட செயலாளர் சுருளிநாதன், விவசாய தொழிலார்கள் சங்க மாவட்ட செயலாளர் அண்ணாமலை ஆகியோர் தலைமை தாங்கினர். விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் கண்ணன், விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட பொருளாளர் வேலவன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேசினர். மாவட்டம் முழுவதும் இருந்தும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

போராட்டத்தின் போது, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். சிலர் வட்டமாக நின்று கும்மியடித்தபடி கோரிக்கைகளை கோஷங்களாக எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு அப்பகுதியிலேயே மதிய உணவு சமைக்கப்பட்டது. அங்கேயே அமர்ந்து அவர்கள் மதிய உணவு சாப்பிட்டனர். தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது லேசான சாரல் மழை பெய்தது. இதனால் போராட்டத்தில் பங்கேற்ற சிலர் குடை பிடித்தபடி அமர்ந்து இருந்தனர்.


Next Story