முத்தூர் பகுதியில் 50 நாட்களாக மூடிக்கிடக்கும் ஏ.டி.எம். மையங்கள் 20 கிலோமீட்டர் தூரம் வரை சென்று பணம் எடுக்கும் பொதுமக்கள்


முத்தூர் பகுதியில் 50 நாட்களாக மூடிக்கிடக்கும் ஏ.டி.எம். மையங்கள் 20 கிலோமீட்டர் தூரம் வரை சென்று பணம் எடுக்கும் பொதுமக்கள்
x
தினத்தந்தி 29 Dec 2016 4:15 AM IST (Updated: 29 Dec 2016 2:48 AM IST)
t-max-icont-min-icon

முத்தூரில் கடந்த 50 நாட்களாக ஏ.டி.எம். மையங்கள் மூடிக்கிடக்கின்றன. இதனால் 20 கிலோமீட்டர் தூரம் வரை சென்று பொதுமக்கள் பணம் எடுத்துவருகிறார்கள். ஏ.டி.எம்.மையங்கள் திருப்பூர் மாவட்டம் முத்தூரில், வெள்ளகோவில் ரோடு, ரவுண்டானா, கொடுமுடி ரோடு ஆகிய பகுதிகளில

முத்தூரில் கடந்த 50 நாட்களாக ஏ.டி.எம். மையங்கள் மூடிக்கிடக்கின்றன. இதனால் 20 கிலோமீட்டர் தூரம் வரை சென்று பொதுமக்கள் பணம் எடுத்துவருகிறார்கள்.

ஏ.டி.எம்.மையங்கள்

திருப்பூர் மாவட்டம் முத்தூரில், வெள்ளகோவில் ரோடு, ரவுண்டானா, கொடுமுடி ரோடு ஆகிய பகுதிகளில் அரசு மற்றும் தனியார் வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த மாதம் 8–ந்தேதி முதல் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதனை தொடர்ந்து முத்தூர் நகர மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்களிடம் இருந்து ரூ.500, ரூ.1,000 செல்லாத நோட்டுகளை வங்கிகளில் தங்களது கணக்கில் செலுத்தினார்கள்.

அதன்பின்னர் வாடிக்கையாளர்கள் அனைவரும் புதிய ரூ.2 ஆயிரம், ரூ.100 நோட்டுகளை பெற்று வந்தனர். மேலும் வங்கிகளில் குறைந்த அளவே பணம் கொடுத்ததாலும், வங்கிகளில் போதிய பணம் இருப்பு இல்லை என்று கூறி ரூ.10 ஆயிரம், ரூ.4 ஆயிரம் ஆகிய குறைந்த அளவு நோட்டுகளையே தற்போது வரை வழங்கி வருகின்றனர்.

50 நாட்களாக மூடிக்கிடக்கிறது

வங்கிகளில் இவ்வாறான நிலை இருக்க முத்தூர் நகர பகுதியில் செயல்பட்டு வரும் அனைத்து ஏ.டி.எம்.களும் கடந்த மாதம் 9–ந் தேதி காலை முதல் 50 நாட்களாக மூடப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து இந்த ஏ.டி.எம். மையங்களில் இதுவரை பழைய ரூ.100, புதிய ரூ.2,000 நோட்டுகள் ஏதும் வைக்கப்படவில்லை. இதனால் இந்த நகர பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையங்கள் இதுவரை திறக்கப்படாமல் பணம் இல்லை, ஏ.டி.எம். சேவை இல்லை என்ற அறிவிப்பு பலகை தொங்க விடப்பட்டு பாதி கதவு திறந்த நிலையில் உள்ளது.

இதற்கு விதிவிலக்காக முத்தூர்–காங்கேயம் ரோட்டில் நத்தக்காடையூர் பிரிவு எதிர்புறம் உள்ள ஒரு ஏ.டி.எம் மையம் மட்டும் கடந்த ஒரு வார காலமாக குறைந்த தொகையுடன் செயல்பட்டு வருகிறது. இந்த ஏ.டி.எம் மையத்தில் பணம் வைக்க வரும் வாகனம் வரும் முன்னே வாடிக்கையாளர்கள் இடம் பிடித்து நீண்ட வரிசையில் நின்று நீண்ட நேரம் காத்திருந்து பணம் எடுத்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.

20 கிலோமீட்டர்

மேலும் முத்தூர் பகுதிகளில் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களும் சுமார் 12 கிலோ மீட்டர் தூரம் உள்ள வெள்ளகோவிலுக்கும், 20 கிலோ மீட்டர் தூரம் உள்ள காங்கேயத்திற்கும், 10 கிலோ மீட்டர் தூரம் உள்ள நத்தக்காடையூர், சிவகிரி ஆகிய ஊர்களுக்கும் சென்று அங்கு எப்போதாவது செயல்பட்டு வரும் ஏ.டி.எம். மையங்களில் நாள் ஒன்று ரூ.2 ஆயிரம் மட்டுமே பணம் எடுத்து வருகின்றனர்.

இவ்வாறு வெளியூர் ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க செல்லும் வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் ஏ.டி.எம். மையங்களில் நீண்ட நேரம் கால்கடுக்க நின்று உள்ளே சென்று பணம் எடுக்கும் நேரத்தில் பணம் தீர்ந்துவிட்டால் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர். மேலும் வெளியூர் ஏ.டி.எம் மையங்களை தேடி பணம் எடுக்க செல்லும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் கூடுதல் நேரமும், எரிபொருள் உட்பட பல்வேறு கூடுதல் போக்குவரத்து செலவுகளும் ஏற்படுகிறது. இந்த இழப்புகளை சரிகட்ட முடியாமல் வாடிக்கையாளர்கள் விழிபிதுங்கிய நிலையில் தவித்து வருகின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக துரித நடவடிக்கை எடுத்து சம்மந்தப்பட்ட மாவட்ட முன்னோடி வங்கி அதிகாரிகள் மூலம் முத்தூரில் மூடப்பட்டுள்ள அனைத்து ஏ.டி.எம் மையங்களிலும் பணம் நிரப்பி வாடிக்கையாளர்கள் எவ்வித சிரமுமின்றி பணம் எடுத்து செல்ல உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Next Story