தலையில் கல்லைப்போட்டு மகன் படுகொலை குடிபோதையில் தகராறு செய்ததால் தந்தை வெறிச்செயல்
ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த மொடச்சூர் அருகே உள்ள கலராமணி பால்கார வீதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 72). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பார்வதி (65). இவர்களுடைய மகன்கள் குமார் (45), ஜெகநாதன் (37), பாலன் (32). குமாருக்கும், ஜெகநாதனுக்கும் திருமணம் ஆகிவிட்ட
கடத்தூர்,
ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த மொடச்சூர் அருகே உள்ள கலராமணி பால்கார வீதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 72). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பார்வதி (65). இவர்களுடைய மகன்கள் குமார் (45), ஜெகநாதன் (37), பாலன் (32). குமாருக்கும், ஜெகநாதனுக்கும் திருமணம் ஆகிவிட்டது. பாலனுக்கு திருமணம் ஆகவில்லை.
குமார் மற்றும் ஜெகநாதனின் வீடுகள் மாரியப்பனின் வீட்டின் அருகிலேயே உள்ளது. பாலன் பெற்றோருடன் வசித்து வருகிறார். ஜெகநாதன் அந்த பகுதியில் உள்ள இறைச்சிக்கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
ஜெகநாதனுக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால் இவர் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வருவார். மேலும் தன்னுடைய வீட்டின் அருகில் உள்ள தந்தை மாரியப்பன் வீட்டுக்கு சென்று அவருடன் ஜெகநாதன் வாய்த்தகராறில் ஈடுபடுவது வழக்கம்.
அதேபோல் நேற்று மாலை குடித்துவிட்டு வீட்டுக்கு ஜெகநாதன் வந்து உள்ளார். அப்போது அவர் வீட்டில் இருந்த தந்தை மாரியப்பனிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டு உள்ளார். தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த மாரியப்பன் கல்லை எடுத்து ஜெகநாதனின் தலையில் தூக்கிப்போட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ஜெகநாதன் துடிதுடித்து செத்தார். உடனே அங்கிருந்து மாரியப்பன் தப்பி ஓடி விட்டார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மகனை கொலை செய்த மாரியப்பனை வலைவீசி தேடி வருகிறார்கள்.
குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட மகனின் தலையில் கல்லை தூக்கிப்போட்டு தந்தையே படுகொலை செய்த சம்பவம் கோபி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.