ஈரோடு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 300 விவசாயிகள் கைது


ஈரோடு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 300 விவசாயிகள் கைது
x
தினத்தந்தி 29 Dec 2016 4:45 AM IST (Updated: 29 Dec 2016 3:10 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 300 விவசாயிகள் கைது

ஈரோடு,

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக்கோரி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 300 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

காத்திருப்பு போராட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நேற்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி ஈரோட்டில் நடந்த காத்திருப்பு போராட்டத்துக்கு விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் வி.ஆர்.மாணிக்கம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஏ.அய்யாவு, தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊர்வலம்

முன்னதாக காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர்கள் ஈரோடு சம்பத் நகரில் உள்ள கொங்கு கலை அரங்கம் முன்பு ஒன்று திரண்டார்கள். பின்னர் அவர்கள், தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்கவேண்டும். வறட்சி நிவாரண பணிகளை உடனடியாக தொடங்கவேண்டும்.

இறந்து போன விவசாயிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத்தொகை வழங்கவேண்டும். வங்கி கடனை அரசே ஏற்கவேண்டும். காய்ந்து போன பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும். கால்நடைகளுக்கு மானிய விலையில் தீவனங்கள் வழங்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியபடி சம்பத்நகர் மெயின் ரோட்டில் ஊர்வலமாக வந்தனர்.

முற்றுகை

பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைந்து காத்திருப்பு போரா ட்டம் நடத்த முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு சம்பத், இன்ஸ்பெக்ட ர்கள் ரவிக்குமார், சிவக்குமார், ஈஸ்வரன் மற்றும் போலீசார் அவர்களை தடு த்து நிறு த்தி, ‘கலெக்டர் அலுவலகத்துக்குள் போராட்டம் நடந்த அனுமதி இல்லை’ என்று கூறினார்கள். அதனால் விவசாயிகள் தரையில் அமர்ந்து கலெ க்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்துக்கு விவசாயிகள் அனுமதி பெறாததால் போலீசார் அவர்களை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றினார்கள்.

300 பேர் கைது

முற்றுகையிட்ட 195 பெண்கள் உள்பட மொத்தம் 300 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தால் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

கைது செய்யப்பட்டவர்கள் ஈரோடு சங்குநகரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் மாலை 6.30 மணிஅளவில் விடுதலை செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து விவசாயிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். ஆனால் சுமார் 35 பேர் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலம் தழுவிய இந்த போராட்டத்தில் விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து இரவு 8 மணிக்கு உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டனர். அதைத்தொடர்ந்து ஈரோடு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story