சங்கொள்ளி ராயண்ணா பிரிகேட் அமைப்பில் ஈசுவரப்பா தீவிரம்: கட்சி விரோத நடவடிக்கைகளை சகித்துக்கொள்ள மாட்டேன் எடியூரப்பா எச்சரிக்கை


சங்கொள்ளி ராயண்ணா பிரிகேட் அமைப்பில் ஈசுவரப்பா தீவிரம்: கட்சி விரோத நடவடிக்கைகளை சகித்துக்கொள்ள மாட்டேன் எடியூரப்பா எச்சரிக்கை
x
தினத்தந்தி 29 Dec 2016 3:41 AM IST (Updated: 29 Dec 2016 3:41 AM IST)
t-max-icont-min-icon

சங்கொள்ளி ராயண்ணா பிரிகேட் அமைப்பில் ஈசுவரப்பா தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் கட்சி விரோத நடவடிக்கைகளை சகித்துக்கொள்ள மாட்டேன் என்று எடியூரப்பா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். எந்த விரோதமும் இல்லை பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா துமகூருவில் நேற்ற

பெங்களூரு

சங்கொள்ளி ராயண்ணா பிரிகேட் அமைப்பில் ஈசுவரப்பா தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் கட்சி விரோத நடவடிக்கைகளை சகித்துக்கொள்ள மாட்டேன் என்று எடியூரப்பா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எந்த விரோதமும் இல்லை

பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா துமகூருவில் நேற்று வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் சுற்றுப்பயணத்தை தொடங்கினார். அதற்கு முன்பாக அங்குள்ள சித்தகங்கா மடாதிபதி சிவக்குமாரசாமியை நேரில் சந்தித்து எடியூரப்பா ஆசி பெற்றார். இந்த சந்திப்புக்கு பிறகு எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

ஈசுவரப்பா சங்கொள்ளி ராயண்ணா பிரிகேட் அமைப்பு பணிகளில் தீவிரமாக உள்ளார். அவர் மீது எங்களுக்கு எந்த விரோதமும் இல்லை. மாநிலத்தில் காங்கிரஸ் அரசு முழுவதுமாக முடங்கியுள்ளது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வறட்சி தீவிரமாக உள்ளது. இதை நிர்வகிப்பதில் மாநில அரசு தோல்வி அடைந்துவிட்டது.

பிரதமரை சந்தித்து மனு

கர்நாடக அரசை தட்டி எழுப்பும் விதமாக நாங்கள் வறட்சி ஆய்வு பணிகளை தொடங்கியுள்ளோம். நாங்கள் 3 குழுக்களாக சுற்றுப்பயணம் செய்து வறட்சியை ஆய்வு செய்கிறோம். இதுகுறித்த அறிக்கையை மாநில அரசிடம் தாக்கல் செய்வோம். தேங்காய், பாக்கு விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். இதுதொடர்பாக ஜனவரி 4–ந் தேதி பிரதமரை நேரில் சந்தித்து மனு கொடுக்க உள்ளோம்.

கோசாலைகளில் விவசாயிகளின் கால்நடைகளுக்கு ஒரு கிலோ தீவனத்திற்கு ரூ.3 வசூலிக்கப்படுகிறது. பணம் கொடுக்கும் சக்தி விவசாயிகளுக்கு இல்லை. அதனால் தீவனத்தை இலவசமாக வழங்க வேண்டும். இதுமட்டுமின்றி ஒன்றியத்திற்கு ஒரு கோசாலை திறக்க வேண்டும். வறட்சி குறித்து விவாதிக்க சித்தராமையாவுக்கு பிரதமர் மோடி நேரம் ஒதுக்கியுள்ளார். சித்தராமையாவுடன் நாங்களும் செல்ல ஆர்வமாக உள்ளோம்.

சுதந்திரமாக செயல்படுகிறார்

ஈசுவரப்பா வேறு காரணங்களுக்காக சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவர் மேல்–சபை எதிர்க்கட்சி தலைவராக இருப்பதால் சுதந்திரமாக செயல்படுகிறார். அதனால் சங்கொள்ளி ராயண்ணா பிரிகேட் பற்றி நான் பேச விரும்பவில்லை. ஆனால் கட்சி விரோத நடவடிக்கைகளை நான் சகித்துக்கொள்ள மாட்டேன். இந்த விஷயத்தில் எங்கள் கட்சி மேலிடம் உரிய நடவடிக்கையை எடுக்கும். காங்கிரசில் இருந்து விலகிய சீனிவாச பிரசாத் எங்கள் கட்சியில் வருகிற 2–ந் தேதி இணைய உள்ளார். நஞ்சன்கூடு இடைத்தேர்தலில் அவர் பா.ஜனதா சார்பில் வேட்பாளராக போட்டியிடுவார்.

எச்.ஒய்.மேட்டியை தொடர்ந்து இன்னும் 3 மந்திரிகள் ராஜினாமா செய்வார்கள் என்று நான் ஏற்கனவே கூறி இருந்தேன். இதுபற்றி போலீஸ் மந்திரியாக உள்ள பரமேஸ்வருக்கு தெரியும். அவரே சொல்ல வேண்டும். மாநிலத்தில் சட்டம்–ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துவிட்டன. சட்டம்–ஒழுங்கை நிலை நாட்டுவதில் மாநில அரசு தோல்வி அடைந்துவிட்டது.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

பேட்டியின்போது ஷோபா எம்.பி. உள்பட பா.ஜனதா நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.


Next Story