பொய் பேசி மக்களை ஏமாற்றிவிட்டார் பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை முதல்–மந்திரி சித்தராமையா குற்றச்சாட்டு


பொய் பேசி மக்களை ஏமாற்றிவிட்டார் பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை முதல்–மந்திரி சித்தராமையா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 29 Dec 2016 3:44 AM IST (Updated: 29 Dec 2016 3:44 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்றும் பொய் பேசி அவர் மக்களை ஏமாற்றுவிட்டார் என்றும் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார். ஊழல் அரசை நடத்துகிறார் காங்கிரஸ் கட்சியின் 132–வது நிறுவன நாளையொட்டி பெங்களூரு துமகூரு ரோட்டில் நேற்று ப

பெங்களூரு,

பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்றும் பொய் பேசி அவர் மக்களை ஏமாற்றுவிட்டார் என்றும் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.

ஊழல் அரசை நடத்துகிறார்

காங்கிரஸ் கட்சியின் 132–வது நிறுவன நாளையொட்டி பெங்களூரு துமகூரு ரோட்டில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை முதல்–மந்திரி சித்தராமையா தொடங்கி வைத்து பேசியதாவது:–

உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை ரத்து செய்துள்ளால், கருப்பு பணம், கள்ளநோட்டு ஒழிக்கப்படும் என்று கூறும் பிரதமர் மோடியால் எந்த மாற்றமும் நிகழ வாய்ப்பு இல்லை. கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சி ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை செலவு செய்தது. இந்த பணம் எங்கிருந்து வந்தது?. இது கருப்பு பணமா? வெள்ளை பணமா?. இதை மோடி சொல்ல வேண்டும். மோடி ஊழல் அரசை நடத்துகிறார்.

ஊழல் செய்துள்ளார்

பா.ஜனதாவினர் இரட்டை நாக்கு படைத்தவர்கள். அவ்வப்போது தங்களின் நிலையை மாற்றிக்கொள்கிறார்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது மோடி கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை கொண்டு வந்து ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வதாக மோடி கூறினார். ஆனால் 15 பைசா கூட அவர் டெபாசிட் செய்யவில்லை.

இதன் மூலம் பிரதமர் மோடி பொய் பேசி மக்களை ஏமாற்றிவிட்டார். ரூபாய் நோட்டுகளை ரத்து செய்துள்ளதை காங்கிரஸ் கட்சி எதிர்க்கவில்லை. ஆனால் எந்த முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்காமல் இந்த முடிவை அறிவித்ததால் நாட்டில் 100–க்கும் அதிகமானோர் மரணம் அடைந்துள்ளனர். இறந்தவர்கள் ஏழைகள், நடுத்தர மக்கள் ஆவார்கள்.

உயிரை தியாகம் செய்துள்ளனர்

மோடி தலைமையிலான மத்திய அரசு முதலீட்டாளர்கள், பணக்காரர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது. இந்த அரசுக்கு ஊழல் ஒழிப்பு குறித்து பேச தகுதி இல்லை. மத்தியில் மதவாத கட்சி ஆட்சி செய்கிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் முன் எப்போதும் இல்லாத பொறுப்பை நிர்வகிக்க வேண்டியது அவசியம். கல்வியை காவிமயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மத்திய அரசை கடுமையாக எதிர்க்க வேண்டும்.

நேரு, இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி ஆகியோர் பிரதமர்களாக இருந்த காலத்தில் நாடு பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்தது. காங்கிரஸ் வரலாறு தான் நாட்டின் வரலாறு. இது பா.ஜனதாவினர் தெரிந்துகொள்ள வேண்டும். காங்கிரஸ் தலைவர்கள் நாட்டிற்காக உயிரை தியாகம் செய்துள்ளனர். பா.ஜனதா கட்சியை சேர்ந்த எந்த தலைவர்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர் என்பதை அவர்கள் சொல்ல வேண்டும்.

120 கோடி பேரிடம் செல்போன்

நாட்டில் வேற்றுமையில் ஒற்றுமையை ஏற்படுத்துவது, ஒருமைப்பாடு, எல்லா மதங்களையும் ஒரே சமமாக பார்ப்பது காங்கிரஸ் கட்சியின் கொள்கை ஆகும். பா.ஜனதாவினர் பிற்படுத்தப்பட்டோரை ஒன்று திரட்டி மாநாட்டை நடத்துகிறார்கள். இதை பார்த்தால் அவர்களுக்கு சிறுபான்மை மக்களை பற்றி கவலை இல்லை என்பது தெரிகிறது. அவர்கள் மதவாதிகள் என்பதற்கு இது போதும்.

காங்கிரஸ் கட்சியினர் கஷ்டப்பட்டு நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுக்கொடுத்தனர். அதன் பயனை நாம் இப்போது அனுபவித்து வருகிறோம். பொருளாதார வளர்ச்சி, சமூக மாற்றம் போன்றவை காங்கிரஸ் தலைவர்கள் நாட்டை ஆண்டபோது ஏற்பட்டது. நாட்டின் 125 கோடி மக்கள்தொகையில் 120 கோடி பேரிடம் செல்போன் உள்ளது. இதற்கு காரணம் ராஜீவ்காந்தி. இதை மூடி மறைக்க இப்போது பிரதமராக உள்ள மோடி முயற்சி செய்கிறார்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

இந்த கூட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் மற்றும் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story