ஜெயலலிதா மறைவால் வெற்றிடம்: தமிழக அரசியலில் வெளிப்படைத்தன்மை இல்லை டி.ராஜேந்தர் பேட்டி


ஜெயலலிதா மறைவால் வெற்றிடம்: தமிழக அரசியலில் வெளிப்படைத்தன்மை இல்லை டி.ராஜேந்தர் பேட்டி
x
தினத்தந்தி 29 Dec 2016 3:46 AM IST (Updated: 29 Dec 2016 3:46 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி, ஜெயலலிதா மறைவால் வெற்றிடம் ஏற்பட்டு உள்ளது. தமிழக அரசியலில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று டி. ராஜேந்தர் கூறினார். தலைவர் பதவிக்கு போட்டி லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர் நேற்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்

திருச்சி,

ஜெயலலிதா மறைவால் வெற்றிடம் ஏற்பட்டு உள்ளது. தமிழக அரசியலில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று டி. ராஜேந்தர் கூறினார்.

தலைவர் பதவிக்கு போட்டி

லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர் நேற்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நான் தலைவர் பதவிக்கு போட்டியிடவேண்டும் என்று எஸ்.ஏ. சந்திரசேகர், கே.ஆர். உள்ளிட்ட நண்பர்கள் என்னிடம் வற்புறுத்தினார்கள். அதனால் நான் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன். சிறிய படங்கள் வாழ வேண்டும் என்றால் தமிழகத்தில் தியேட்டர்களில் கட்டண குறைப்பு செய்யப்படவேண்டும்.

ஜெயலலிதாவின் அனுதாபி

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக யார் வரவேண்டும் என்பது அந்த கட்சியின் உள் விவகாரம். ஈழத்தமிழர் பிரச்சினை, காவிரி பிரச்சினை உள்ளிட்ட தமிழகம் சார்ந்த பிரச்சினைகளில் ஜெயலலிதா துணிச்சலாக முடிவு எடுத்தார். அதனால் நான் ஜெயலலிதாவின் அனுதாபி. மேலும் ஜெயலலிதா கேட்டுக்கொண்டதால் இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தேன். ஜெயலலிதா தமிழகத்தின் உரிமைகளுக்காக இறுதி வரை போராடினார்.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறுகிறார்கள். இதுபற்றி கேள்வி எழுப்ப வேண்டிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் நான் இதனை அரசியலாக்க விரும்பவில்லை என்று கூறி உள்ளார். எனவே நானும் இதுபற்றி குரல் கொடுக்கவேண்டியது இல்லை. ஜெயலலிதா மறைவினால் வெற்றிடம் ஏற்பட்டு உள்ளது. தமிழக அரசியலில் தற்போது வெளிப்படைத்தன்மை இல்லை. அதனால் தான் துணை ராணுவ படை தமிழகத்தின் தலைமை செயலகத்துக்குள் நுழைந்து உள்ளது. தலைமை செயலாளராக இருந்த ராமமோகனராவ் மடியில் கனம் இல்லை என்றால் அவரது வீட்டில் வருமான வரித்துறை ஏன் சோதனை போடபோகிறது? 4 நாட்களுக்கு முன் நெஞ்சு வலி என கூறி மருத்துவமனையில் இருந்த ராமமோகனராவ் அரசியல் வாதியை போல் பேட்டி கொடுத்து இருக்கிறார். அவர் அதிகாரியா? அரசியல் வாதியா? என்பதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story