சாத்தூர் அருகே பட்டாசு ஆலை தீ விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வலியுறுத்தல்


சாத்தூர் அருகே பட்டாசு ஆலை தீ விபத்தில்  பலியானோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
x
தினத்தந்தி 30 Dec 2016 4:15 AM IST (Updated: 29 Dec 2016 6:50 PM IST)
t-max-icont-min-icon

சாத்தூர் அருகே நடந்த பட்டாசு ஆலை தீ விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்துக்கும் தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தியுள்ளது. 8 பேர் பலி சாத்தூர் அருகே நார்ணாபுரத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் வ

தாயில்பட்டி,

சாத்தூர் அருகே நடந்த பட்டாசு ஆலை தீ விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்துக்கும் தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தியுள்ளது.

8 பேர் பலி

சாத்தூர் அருகே நார்ணாபுரத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் வெம்பக்கோட்டை அருகில் உள்ள எலுமிச்சங்காப்பட்டி கிராமத்தை சேர்ந்த 8 பேர் பலியானார்கள். உயிரிழந்தோரின் குடும்பத்தினரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் வாசுகி, மாநிலக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். அவர்களுடன் கட்சியின் மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சுப்பாராஜ், பாண்டியன், விஜயகுமார் ஆகியோரும் சென்றிருந்தனர்.

இதனைத்தொடர்ந்து வாசுகி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;–

ரூ.10 லட்சம்

தொடர்ந்து பட்டாசு விபத்து நடந்து வருவது வேதனை அளிக்கிறது. அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்ய வேண்டும். போதிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த விபத்தில் பலியான 8 பேரின் குடும்பத்துக்கும் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதோடு அரசு வேலையும் வழங்க வேண்டும்.

ஏற்கனவே ஆலை நிர்வாகத்தின் சார்பில் ரூ.4 லட்சத்து 20 ஆயிரத்துக்கு வழங்கப்பட்ட காசோலை உரிமையாளர் பெயரில் இல்லாமல் வேரு நபரின் பெயரில் காசோலை வழங்கப்பட்டுள்ளது. அந்த கணக்கில் போதுமான பணம் இல்லாமல் காசோலை திரும்ப வந்துள்ளது. எனவே அந்த நிவாரண தொகையினை ஆலை நிர்வாகத்திடம் இருந்து பெற்றுத்தர அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெள்ளை அறிக்கை

பாதிக்கப்பட்டவர்களை நேரில் வந்து சந்தித்து அமைச்சர்கள் ஆறுதல் கூறாமல் சாத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள். அங்கும் பலமணி நேரம் காக்க வைத்து அலைக்கழித்துள்ளனர். நேரடியாக வந்து பார்த்தால் அவர்களது குடும்ப நிலையினை அறிந்திருக்க முடியும். கண் துடைப்புக்காக ஆறுதல் நாடகம் நடத்தியுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டு நடந்துள்ள பட்டாசு ஆலை விபத்தில் உயிர் இழந்தோர் மற்றும் அரசு வழங்கியுள்ள நிவாரணம் குறித்து முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story