சேலம் கன்னங்குறிச்சியில் மனித எலும்புக்கூட்டை எரித்தது மந்திரவாதியா? போலீசார் விசாரணை


சேலம் கன்னங்குறிச்சியில் மனித எலும்புக்கூட்டை எரித்தது மந்திரவாதியா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 30 Dec 2016 4:30 AM IST (Updated: 29 Dec 2016 9:20 PM IST)
t-max-icont-min-icon

சேலம் கன்னங்குறிச்சியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூட்டை எரித்தது மந்திரவாதியா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எலும்புக்கூடு எரிப்பு சேலம் கன்னங்குறிச்சியில் இருந்து ஏற்காடு அடிவாரம் செல்லும் சாலையில் நேற்று முன்தினம் காரில் வந்

சேலம்,

சேலம் கன்னங்குறிச்சியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூட்டை எரித்தது மந்திரவாதியா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எலும்புக்கூடு எரிப்பு

சேலம் கன்னங்குறிச்சியில் இருந்து ஏற்காடு அடிவாரம் செல்லும் சாலையில் நேற்று முன்தினம் காரில் வந்த ஆணும், பெண்ணும் ஒரு சாக்கு மூட்டையை சாலையோரத்தில் இருந்த புதரில் வீசி தீ வைத்து எரித்தனர். இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அங்கு வந்தனர். அப்போது அந்த ஆணும், பெண்ணும் காரில் ஏறி அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

பின்னர், பொதுமக்கள் அருகில் சென்று பார்த்தபோது, ஒரு மனிதனின் எலும்புக்கூடு எரிந்து கிடந்தது தெரியவந்தது. இது குறித்து கன்னங்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று எலும்புக்கூடுகளை சேகரித்து பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மந்திரவாதியா?

இந்தநிலையில், மனித எலும்பு கூட்டின் மண்டை ஓடு மற்றும் இதர எலும்புகள் மரவனேரியில் உள்ள ரசாயன பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த எலும்புக்கூடு எவ்வளவு நாட்களுக்கு முன் இறந்தவருடையது? எனவும், அந்த எலும்புக்கூடுக்குரியவர் ஆணா? பெண்ணா? எனவும், அவரை யாரேனும் கொலை செய்து எலும்புக்கூட்டை இங்கு வந்து போட்டு தீ வைக்கப்பட்டதா? எனவும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆய்வு அறிக்கையின் முடிவில் தான் முழுவிவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இது ஒருபுறம் இருக்க, நேற்று முன்தினம் அமாவாசை என்பதால், யாராவது நரபலி கொடுத்துவிட்டு, பின் எலும்புகூட்டை கொண்டு வந்து போட்டார்களா? என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் போலீசார் விசாரிக்கின்றனர். இதனிடையே, அந்த எலும்புக்கூட்டை கொண்டு வந்து போட்டது மந்திரவாதியாக இருக்கலாம் என்றும், எங்கேயாவது பழைய எலும்புக்கூடு மண்டை ஓடுகளை வைத்து பூஜை செய்துவிட்டு, பின்னர் சாலையோரம் வீசி அதற்கு தீ வைத்து எரித்திருக்கலாம் என்றும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் எலும்புக்கூட்டை போட்டு எரித்த 2 பேர் யார்? அவர்கள் எங்கு இருக்கிறார்கள்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story