போலீசார் குற்றப்பத்திரிகையை விரைவில் தாக்கல் செய்வார்கள்: குருங்குளம் சர்க்கரை ஆலையில் முறைகேடு செய்தவர்களை நிர்வாகம் காப்பாற்றாது தமிழ்நாடு சர்க்கரை கழக தலைவர் மகேசன்காசிராஜன் பேச்சு


போலீசார் குற்றப்பத்திரிகையை விரைவில் தாக்கல் செய்வார்கள்: குருங்குளம் சர்க்கரை ஆலையில் முறைகேடு செய்தவர்களை நிர்வாகம் காப்பாற்றாது தமிழ்நாடு சர்க்கரை கழக தலைவர் மகேசன்காசிராஜன் பேச்சு
x
தினத்தந்தி 30 Dec 2016 4:30 AM IST (Updated: 29 Dec 2016 10:50 PM IST)
t-max-icont-min-icon

குருங்குளம் சர்க்கரை ஆலையில் முறைகேடு செய்தவர்களை நிர்வாகம் காப்பாற்றாது. இது தொடர்பாக விரைவில் போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வார்கள் என்று தமிழ்நாடு சர்க்கரை கழக தலைவர் மகேசன்காசிராஜன் கூறினார். பேரவைக்கூட்டம் தமிழ்நாடு சர்க்கரை கழக 41–வது ப

தஞ்சாவூர்,

குருங்குளம் சர்க்கரை ஆலையில் முறைகேடு செய்தவர்களை நிர்வாகம் காப்பாற்றாது. இது தொடர்பாக விரைவில் போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வார்கள் என்று தமிழ்நாடு சர்க்கரை கழக தலைவர் மகேசன்காசிராஜன் கூறினார்.

பேரவைக்கூட்டம்

தமிழ்நாடு சர்க்கரை கழக 41–வது பேரவைக்கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தமிழ்நாடு சர்க்கரை கழக தலைவரும், நிர்வாக ஆணையருமான மகேசன்காசிராஜன் தலைமை தாங்கினார். தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி சிவசவுந்தரவல்லி வரவேற்றார்.

விவசாயிகள்

கூட்டத்தில் கரும்பு விவசாயிகள் கலந்து கொண்டு பேசியதாவது:–

காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் சுவாமிமலைசுந்தரவிமலநாதன்:– விவசாயிகளின் முன்னேற்றத்தில் சர்க்கரை ஆலை நிர்வாகம் பங்கெடுக்க வேண்டும். ஆனால் குருங்குளம் சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளை முன்னேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சர்க்கரை ஆலையில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு இணை மின் உற்பத்திக்காக விவசாயிகளின் பங்குத்தொகை பெறப்பட்டது. 18 மாதத்தில் முடிக்கும் வகையில் இந்த பணி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை ஆக்கப்பூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குருங்குளம் சர்க்கரை ஆலையில் நடந்த பல்வேறு முறைகேடுகள், ஊழல்கள் குறித்து சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டன்னுக்கு ரூ.4 ஆயிரம்

விவசாயி ராமசாமி:– கரும்பு விவசாயிகளுக்கு பாக்கித்தொகை வழங்கப்படாமல் உள்ளது. அதனை உடனடியாக வழங்க வேண்டும். மேலும் தமிழக அரசு கரும்புக்கான விலையை சென்ற ஆண்டு அறிவித்த தொகையையே இந்த ஆண்டும் அறிவித்து உள்ளது. இந்த விலையை மறுபரிசீலனை செய்து கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும். குருங்குளம் சர்க்கரை ஆலையில் நடைபெற்ற ஊழல் குறித்து 1 ஆண்டுக்கு முன்பே மனு கொடுத்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

விவசாயி ராமநாதன்:– தமிழக அரசு அறிவித்துள்ள கரும்பு டன்னுக்கு ரூ.2,850 விலையை திரும்ப பெற்று விட்டு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் விலை நிர்ணயிக்க வேண்டும். மத்திய அரசு இதுவரை விலையை நிர்ணயிக்க வில்லை. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை விவசாயிகள் 100 சதவீதம் கரும்புகளை வெட்டுவதற்கு பதிவு செய்திருந்தனர். ஆனால் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இதுவரை 18 சதவீதம் கூட பதிவு செய்யப்படவில்லை. மேலும் ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு தர வேண்டிய பாக்கித்தொகை டன்னுக்கு ரூ.450–ஐ உடனடியாக வழங்க வேண்டும். இல்லையென்றால் விவசாயிகள் கரும்பு சாகுபடியை தவிர்த்து விட்டு வேறு சாகுபடி செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.

திருப்பித்தர வேண்டும்

விவசாயி கோவிந்தராஜ்:– கடந்த ஆண்டு வெட்டிய கரும்புக்கு இன்னும் நிலுவைத்தொகை தரப்படவில்லை. இதனால் நாங்கள் பொங்கல் பண்டிகையை துக்கநாளாக கடைபிடிக்க வேண்டி உள்ளது. கரும்பு டன்னுக்கு கடந்த ஆண்டு நிர்ணயித்த விலையையே தற்போதும் அறிவித்துள்ளனர். எனவே கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் விலை நிர்ணயிக்க வேண்டும். இணை மின் உற்பத்திக்கு விவசாயிகளிடம் இருந்து பங்குத்தொகையாக ரூ.11 கோடி பெறப்பட்டது. ஆனால் இதுவரை எந்த பணிகளும் நடைபெறவில்லை. எனவே விவசாயிகளின் பங்குத்தொகையை திருப்பித்தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சர்க்கரை கழக தலைவர் பேச்சு

பின்னர் தமிழ்நாடு சர்க்கரை கழக தலைவரும், நிர்வாக ஆணையருமான மகேசன்காசிராஜன் பேசியதாவது:–

தமிழகத்தில் மொத்தம் 19 பொது, கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் உள்ளன. இவற்றில் எத்தனாலை பயன்படுத்தி இணை மின் உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் இரு ஆலைகளில் இணை மின் உற்பத்தி தொடங்கப்பட்டு விட்டது. 3–வதாக குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் இணை மின் உற்பத்தி விரைவில் தொடங்கப்படும்.

இந்த ஆலையில் நிகழ்ந்த முறைகேடுகள் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள். இதில் யாரையும் காப்பாற்றுவதற்கு சர்க்கரை கழகமும், ஆலை நிர்வாகமும் முன்வராது. தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இந்த ஆலையில் தனியாக இயக்குனரை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வருகிற காலத்தில் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை சிறப்பான முறையில் இயங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் சர்க்கரை கழக இயக்குனர் பூமா, சர்க்கரை ஆலை தலைமை பொறியாளர் சுப்பிரமணியன், தலைமை கணக்கு அலுவலர் செல்வராஜ், தமிழ்நாடு சர்க்கரை கழக தலைமை சர்க்கரை ரசாயனர் முத்துவேலப்பன், நிறும செயலர் சங்கரகுமார், ஆளுனர் பிரதிநிதி சரவணகுமார், கோட்டாட்சியர் சுரேஷ், வேளாண்மை இணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, தாசில்தார் குருமூர்த்தி மற்றும் தஞ்சை, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story